கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர்.
வங்கக் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது தொடர் கதையாக இருந்து வருகிறது. கடந்த வாரம் பாம்பன் விசைப்படகு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாகவும், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் என்றும் செய்திகள் வெளிவந்தன. ஆனால், அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என இலங்கை அரசு மறுத்தது.
இந்த நிலையில் தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது, விரட்டப்படுவது மீண்டும் அரங்கேறியுள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று காலை 600க்கும் மேற்பட்ட விசைப்படகில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள், 20க்கு மேற்பட்ட விசைப்படகில் இருந்த மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் வீசினர்.
இனி இந்த பகுதிக்கு வரக்கூடாது என்று எச்சரித்து விரட்டி அடித்துள்ளனர். இதனால் மீனவர்கள் நஷ்டத்துடன் இன்று காலை கரை திரும்பி உள்ளனர்.







