ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிக் குழுவை அறிவித்துள்ளது அதிமுக.
9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் நாளை மறுநாள் ஆலோசனையும் மேற்கொள்கிறது. வாக்காளர் பட்டியல் வெளியிட்டதோடு, தேர்தல் நடத்தை விதிகளும் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் 9 மாவட்டத் தேர்தலுக்கான தேர்தல் பணிக் குழுவை அறிவித்துள்ளது அதிமுக. இதுதொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் வெளியிட்ட அறிவிப்பில், வேலூர் மாநகர் மற்றும் புறநகர் மாவட்டத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கோகுல இந்திரா, ஆர்.காமராஜ், பெஞ்சமின் ஆகியோரும், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், கருப்பணன், கே.சி.வீரமணி ஆகியோரும் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு தங்கமணி, வளர்மதி, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோரும், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், உடுமலை ராதாகிருஷ்ணனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுபோலவே திருநெல்வேலி மாவட்டத்திற்கு தளவாய் சுந்தரம், கருப்பசாமி பாண்டியன் ஆகியோரும், விழுப்புரத்திற்கு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், சி.வி.சண்முகம் ஆகியோரும், தென்காசி மாவட்டத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, உதயகுமார், ராஜேந்திர பாலாஜியும், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், சி.விஜயபாஸ்கர் ஆகியோரையும் பொறுப்பாளர்களை நியமித்து ஓபிஎஸ், இபிஎஸ் அறிவித்துள்ளனர்.








