நடைபெறவிருக்கும் உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக கையொப்பமிட கோரி எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் ஏ மற்றும் பி படிவங்களை அனுப்பி வைக்குமாறு அவர் கோரியுள்ளார்.
இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் ஓ.பி.எஸ் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசியதாவது:
நடைபெற இருக்கும் உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வேட்பாளர்களுக்கு கட்சியின் சின்னம் வழங்குவதற்கான படிவத்தில் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்திட்டார். இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கையெழுத்திட வேண்டும்.
கடிதத்தில் அதிமுக தலைமை அலுவலக நிர்வாகிகளின் மூலமாக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சென்றடைந்துவிட்டது.
உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதற்காக form A மற்றும் form B ஆகிய படிவங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.
வேட்புமனு தாக்கல் முடிவுற்ற நிலையில் நாளை மாலை 3 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வழங்கினால் மட்டுமே அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் என அவர்களுக்கு இரட்டை இலை சின்னம் வழங்கப்படும்.
தொண்டர்களின் நலன் கருதி ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்திட்டார். எடப்பாடி பழனிசாமியும் கையெழுத்திடுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்று மனோஜ் பாண்டியன் தெரிவித்தார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோஷம் எழுந்ததை அடுத்து, இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தனித்தனியாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். வரும் ஜூலை 9ம் தேதி உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர்களான இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவருமே போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ஏ மற்றும் பி படிவத்தில் கையொப்பமிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.







