இலங்கை – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் ,இலங்கை காலேவில் இன்று தொடங்கியது . டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.இதனால் அந்த அணி சீரான இடைவெளியில் தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இலங்கை அணியில் நிரோஷன் டிக்வெல்லா மட்டும் அரைசதம் பதிவு செய்தார். 58 ரன்கள் எடுத்தபோது அவர் ஆட்டமிழந்தார் . கேப்டன் கருணாரத்னே 28 ரன்களில் ஆட்டமிழந்தார். 59 ஓவர்களில் இலங்கை அணி 10 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஆஸ்திரேலிய அணியில் கிறிஸ் லியான் 5 விக்கெட்டுகளையும்,ஸ்வெப்சன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 98 ரன்கள் எடுத்துள்ளது.
உஸ்மான் கவாஜா 47 ரன்களிலும், டிராவிஸ் ஹெட் 6 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.
அதிரடி வீரர் டேவிட் வார்னர் 25 ரன்களிலும், மார்னஸ் லபுஸ்சக்னே 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இலங்கை சார்பில் ரமேஷ் மென்டிஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்டீவன் ஸ்மித் 6 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள ஆஸி., அணி டி 20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
ஒரு நாள் தொடரை 3-2 என்ற கணக்கில் இலங்கை வென்றது.
-மணிகண்டன்








