தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது.
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவுக்காக மாநிலம் முழுவதும் 31 ஆயிரத்து 29 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாநகராட்சிகளில் ஆயிரத்து 370 வார்டு உறுப்பினர்களுக்கான பதவிகளுக்கு 11 ஆயிரத்து 196 பேர் போட்டியிடுகின்றனர். நகராட்சிகளில் 3 ஆயிரத்து 825 கவுன்சிலர் பதவிகளுக்கு 17 ஆயிரத்து 922 பேர் களம்காண்கின்றனர். பேரூராட்சிகளில் 7 ஆயிரத்து 412 கவுன்சிலர் பதவிகளுக்கு 28 ஆயிரத்து 660 பேர் போட்டியிடுகின்றனர். 12 ஆயிரத்து 607 பதவிகளுக்கு நடைபெறும் தேர்தலில் மொத்தம் 57 ஆயிரத்து 778 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மாநகராட்சிகளில் 4, நகராட்சிகளில் 18, பேரூராட்சிகளில் 196 கவுன்சிலர்கள் என மொத்தம் 218 பேர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். மேலும், 276 பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது.
வாகுப்பதிவுகள் ஒரு பிரச்சனையும் இன்றி நடைப்பெற வேண்டும் என்பதற்காக கண்காணிப்பு பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி பாதுகாப்பு பணியில் 3,572 போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருகின்றனர். சென்னையில் கூடுதலாக 45 பறக்கும் படை குழுக்கள் இன்று முதல் செயல்பட உள்ளன.
ஒரு மண்டலத்திற்கு மூன்று பறக்கும் படைகள் என்ற அடிப்படையில் கூடுதலாக மேலும் 45 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டன. முன்னதாக 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் சென்னையில் 45 பறக்கும் படைகளும் 37 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இது தவிர தேர்தல் தொடர்பான விதிமீறல்கள் குறித்து இலவச தொலைபேசி என் மூலம் பறக்கும் படை குழுக்களுக்கு தகவல் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.








