உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி, ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
திருச்சி உறையூர் பகுதியில் பழுதடைந்த குடிநீர் குழாய்கள் மாற்றி அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, மாநகராட்சி விரிவாக்கத்தின்போது இணைக்கப்படும் கிராம பஞ்சாயத்துக்களில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடியும் வரை, அவர்கள் அப்பதவியில் தொடர்ந்து நீடிப்பார்கள் எனக் கூறினார்.
மேலும், ஒன்றிய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்த, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகள் நடைப் பெற்று வருவதாகவும் அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.







