கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்கும் இரு நிறுவனங்களுக்கு, 4 ஆயிரத்து 567 கோடி ரூபாய் கடனுதவி வழங்க, மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த, ‘சீரம் இன்ஸ்டிடியூட்’ நிறுவனம், ‘கோவிஷீல்டு’ என்ற கொரோனா தடுப்பூசி மருந்தை தயாரிக்கிறது. இந்நிறுவனம், மாதம், 10 கோடி ‘டோஸ்’ தடுப்பூசி மருந்து தயாரிக்கும் திறன் உடையது. தற்போது, கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், தடுப்பூசி மருந்து தயாரிப்பை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு 3 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கினால், 10 கோடிக்கும் அதிகமான ‘டோஸ்’ தடுப்பூசி மருந்து தயாரிக்கலாம்’ என சீரம் நிறுவனம் சமீபத்தில் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்திற்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் மற்றும் ‘கோவாக்சின்’ என்ற கொரோனா தடுப்பூசி மருந்தை தயாரிக்கும், ‘பாரத் பயோடெக்’ நிறுவனத்திற்கு ஆயிரத்து 567 கோடி ரூபாய் கடனுதவி வழங்க மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.







