திருமணம், விளையாட்டு மைதானங்களில் மது அருந்த அனுமதி; அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்

திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் மது அருந்த அனுமதி அளித்த தமிழ்நாடு அரசிற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,  பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கடும் கண்டனம்…

திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் மது அருந்த அனுமதி அளித்த தமிழ்நாடு அரசிற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,  பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

மாவட்ட ஆட்சியர்கள் அனுமதியுடன், மதுவிலக்குத்துறை சிறப்பு அனுமதி வழங்கலாம் என புதிய சட்டத்திருத்தத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வந்தது. இதன் மூலம் உரிய அனுமதி பெற்று இனி திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பயன்படுத்தலாம். கட்டணம் செலுத்தி மதுபானம் பயன்படுத்த அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசிதழ் வெளியிடப்பட்டது.

இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில், கல்யாண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில், மதுவுக்கு அனுமதி வழங்கும் சட்டத் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது இந்த திறனற்ற திமுக அரசு. மது ஆலைகளை மூடுவோம், மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, வருடா வருடம் உச்ச வரம்பு நிர்ணயித்து மது விற்பனையைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

சட்டம் ஒழுங்கு ஏற்கனவே பொதுமக்களுக்குச் சவாலாக மாறிவிட்ட நிலையில், திமுகவினர் நடத்தும் மது ஆலைகளின் வருமானத்தைப் பெருக்குவதற்காக, சமுதாயச் சீர்கேடுக்கு வழிவகுக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து திமுக ஈடுபட்டு வருவதை, வன்மையாகக் கண்டிக்கிறோம். உடனடியாக இந்த அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும் என்று பாஜக தமிழ்நாடு சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் திருமண அரங்கங்கள், விளையாட்டு அரங்கங்கள், விருந்துக் கூடங்கள் மற்றும் வீடுகளில் மதுவை இருப்பு வைக்கவும், விருந்தினர்களுக்கு பரிமாறவும் தமிழ்நாடு அரசு அனுமதி அளித்திருக்கிறது. தமிழக அரசின் இந்த முடிவு மிக மோசமான சமூக, பண்பாட்டு சீரழிவுக்கு வழிவகுக்கும். மக்கள்நலனில் சிறிதும் அக்கறையின்றி, அரசின் வருவாயையும், சில தனி ஆள்களின் வருவாயையும் பெருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கமுக்கமாக கொண்டு வரப்பட்டுள்ள இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார்.

டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பதிவில், Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981, என்ற சட்டத்தில் திருத்தம் செய்து, திருமண மண்டபங்கள், அரங்கங்கள், வீடுகளில் நடக்கும் நிகழ்வுகளில் சிறப்பு அனுமதி பெற்று மது பரிமாறிக்கொள்ள வகைசெய்யும் அனுமதியை வழங்கியிருப்பது கண்டனத்திற்குரியது.

ஆட்சிக்கு வந்ததும் மதுக்கடைகள் மூடப்படும் என்று தேர்தல் பரப்புரையின்போது திமுக அளித்த வாக்குறுதிக்கு மாறாக, அனைத்து வீடுகளிலும் மதுவைப் பயன்படுத்தும் வகையில் அறிவித்து மது விற்பனையை விஸ்தரித்திருப்பது இதுவரை போதைக்கு அடிமை ஆகாதவர்களையும் குறி வைத்து சமூக மது பழக்கத்தை அதிகரிக்கும் நடவடிக்கையை விடியா அரசு மேற்கொண்டுள்ளதா? என கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.