பிரதமர் மோடி வழி நடப்போம், புதிய பாரதம் படைப்போம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழா நல்வாழ்த்துகள், சுதந்திர தின விழாவை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், இந்தியத் தேசத்து மக்கள் அனைவருக்கும் சுதந்திரதின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இந்தச் சுதந்திர தினத்தில் அனைத்து இந்தியர்களுக்கும், இந்தியாவை நேசிக்கும் அனைவருக்கும் தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார். இன்று புதிய தீர்மானத்துடன், புதிய திசையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாளாக இன்றைய நாளைக் குறிப்பிட்டார் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனநாயகத்தின் தாய் இந்தியா, இந்தியத் தேசம் கடந்த 75 ஆண்டுகள் பல ஏற்றத்தாழ்வுகளைச் சந்தித்துள்ளது, நாம் பல சாதனைகளைக் கண்டுள்ளோம், அதேவேளையில் இயற்கைப் பேரிடர், போர் எனப் பல சறுக்கல்களையும் எதிர்கொண்டுள்ளோம், நம் நாட்டின் வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் தன்மையே நம்மை வழிநடத்தும் சக்தியாக இருந்துள்ளது, தியாகங்களால் தேசப்பற்றை வளர்க்கும் இந்த நாள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள், விடுதலை போராட்ட வீரர்களின் கனவை நிறைவேற்றி, அவர்கள் நினைவைப் போற்றுவோம் என்று பிரதமர் குறிப்பிட்டார் எனத் தெரிவித்துள்ள அவர்,
இன்றைய தினம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் மூவண்ணகொடி பறக்கிறது, உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகின்றனர், சுதந்திர தினத்தை ஒட்டி வீடுதோறும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று கோரினேன், அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, நாட்டு மக்கள் அனைவரும் நாட்டின் பெருமையைக் கொண்டாடத் திரண்டுள்ளனர், அனைவருக்கும் நன்றி எனப் பிரதமர் தெரிவித்தார் எனக் கூறியுள்ளார்.
மகாத்மா காந்தி, நேரு, பட்டேல், எஸ்.பி. முகர்ஜி, சாஸ்திரி, அம்பேத்கர், லோகியோ ராஜாஜி, பகத்சிங், ராஜ்குரு, ஜெய்பிரகாஷ் நாராயணன், மங்கள் பாண்டே, நேதாஜி, ராணி வேலுநாச்சியார், சுப்பிரமணிய பாரதியார், பழங்குடியின விடுதலை வீரர்கள் உள்ளிட்ட அனைவரையும் நாம் நினைவு கூர்வோம், சுதந்திரத்திற்காக அஹிம்சை, ஆயுதம், அரசியல் சாசனம், எனப் பல பரிமாணங்களில் தலைவர்கள், போராடினார்கள், ரவீந்திரநாத் தாகூர், சுவாமி விவேகானந்தர் போன்றோர் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினர் என்று நம் பாரதப் பிரதமர் தியாகிகளையும், தலைவர்களையும் நினைவு கூர்ந்தார் எனத் தெரிவித்துள்ள அவர்,
ஆங்கிலேயர்களை வெளியேற்றினால் பொருளாதாரம் பின்னோக்கி சென்று விடும் என்று கூறினார்கள், இன்று இந்தியா வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது என்று பிரதமர் புள்ளி விபரங்களுடன் விளக்கினார் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், பிரதமர் மோடி பேசியதைக் குறிப்பிட்டுள்ள அவர், “இன்று நாம் எதிர்கொள்ளும் இரண்டு பெரிய சவால்கள், ஒன்று ஊழல், மற்றொன்று உறவுமுறை (நெப்போட்டிசம்), ஊழல், நாட்டை கரையான்போல் குழிபறிக்கிறது, அதை எதிர்த்து நாம் போராட வேண்டும் என்று குறிப்பிட்டார் எனவும், முன்னதாக, சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவிற்கு மிக முக்கியமான காலகட்டம் என்று கூறி அந்த 5 உறுதிமொழிகளையும் பட்டியலிட்டார் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “நம் நாடு இன்னும் 25 ஆண்டுகளில் வளர்ந்த தேசமாக இருக்கும், அதற்கு நாம் ஐந்து உறுதிமொழிகளை ஏற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,
• முதலாவது உறுதி மொழி இந்தியாவை வளர்ந்த தேசமாக மாற்றுவதே, நாம் அனைவரும் பெரிய இலட்சியங்களுடன் இலக்குகளுடன், நாம் முன்னேறிச் செல்ல வேண்டும்
• இரண்டாவது உறுதிமொழி, நம் சமூகத்தில் சமுதாயத்தில் உள்ள எல்லா வகையான அடிமைத்தனத்தையும் வேரறுக்க வேண்டும்.
• மூன்றாவது நம் நாட்டின் பாரம்பரியத்தைக் கலாச்சாரத்தை நினைத்து எப்போதும் பெருமிதம் கொள்ள வேண்டும்
• நான்காவதாக, வேற்றுமையில் விளையும் ஒற்றுமையின் பலத்தை உறுதியாகப் பற்றிக் கொள்ள வேண்டும்
• ஐந்தாவது உறுதிமொழி குடிமக்களின் கடமைகளை செவ்வனே ஆற்றுவது
அமைச்சர்களுக்கும், முதல்வர்களுக்கும், பிரதமருக்கும் இந்தக் கடமை இருக்கிறது” என்று பிரதமர் மோடி பட்டியலிட்டார் எனக் கூறியுள்ளார்.
மேலும், இந்த 5 உறுதிமொழிகளையும் ஏற்று நாட்டு மக்கள் பின்பற்றினால் நம் விடுதலை வீரர்களின் கனவுகளை நிறைவேற்றி இந்தியாவை இன்னும் 25 ஆண்டுகளில் உன்னதமாக வளர்ந்த நாடாக உருவாக முடியும் என்று பிரதமர் நம்பிக்கைத் தெரிவித்தார் எனவும், ஓய்வில்லாமல் நம் தேசத்தைப் பற்றியே சிந்தித்து உழைத்துக் கொண்டிருக்கும், நம் பிரதமர் நரேந்திர மோடி, நீண்ட தொலை நோக்குப் பார்வையுடன் கூறியிருக்கும் உறுதி மொழிகளைக் கடைப்பிடிப்போம், அவர் வழி நடப்போம், புதிய பாரதம் படைப்போம் எனத் தெரிவித்துள்ளார்.








