முக்கியச் செய்திகள் இந்தியா கட்டுரைகள் செய்திகள்

25 ஆண்டுகளில் வல்லரசாக மாறுமா இந்தியா?


ஜெயகார்த்தி

கட்டுரையாளர்

25 ஆண்டுகளில் வல்லரசாக மாற இந்தியா என்ன செய்ய வேண்டும்? அதற்கான வழிமுறைகள் என்ன? அப்துல் கலாம் குறிப்பிட்ட 2020ல் வல்லரசு என்ற இலக்கை எட்ட இயலாததற்கு காரணம் என்ன என்பது பற்றி இனி காண்போம்…

கலாமின் வல்லரசு கனவு

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

2020ஆம் ஆண்டுக்குள் இந்தியா வல்லரசாக மாறும் என்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் இல்லாத மக்கள் வாழும் நாடாக உருமாற்றம் அடையும் என்றும் மக்கள் குடியரசுத் தலைவராக திகழ்ந்த அப்துல் கலாம் நம்பினார். அதனை இலக்காக கொண்டு செயல்பட வேண்டும் என்றும் அதற்கான திட்டங்கள் குறித்தும் “இந்தியா 2020” என்ற தம்முடைய நூலில் அவர் குறிப்பிட்டுள்ளார். 2017ம் ஆண்டு கூட பிரதமர் நரேந்திர மோடி பேசும் போது, 2022ல் நாடு வல்லரசாக மாறும் என்று குறிப்பிட்டிருந்தார்.  75 ஆண்டுகளில் இந்தியா மாபெரும் வளர்ச்சியை எட்டியிருந்தாலும் பல்வேறு காரணங்களால் வல்லரசு அல்லது வளர்ச்சி அடைந்த நாடு என்ற இலக்கை எட்ட முடியவில்லை. இந்த நேரத்தில்தான், 75வது சுதந்திர தின விழாவில், டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்துவிட்டு, நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இன்னும் 25 ஆண்டுகளில், அதாவது 100வது சுதந்திர தின விழாவில் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடுகளின் பட்டியலில் இணைய வேண்டும் என்றும் அதற்காக நாட்டு மக்கள் உறுதியேற்புடன் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

என்ன செய்ய வேண்டும்?

இந்தச் சூழலில், வளர்ச்சி அடைந்த நாடாக மாற இந்தியா என்ன செய்ய வேண்டும்? எந்த அடிப்படையில் வளர்ச்சி அடைந்ததாக ஒரு நாடு குறிப்பிடப்படுகிறது? ஏன் இன்னும் வளரும் நாடுகளில் ஒன்றாகவே இந்தியா இருக்கிறது? என்பது பற்றி காண்போம். இந்தியா வேளாண்மை சார்ந்த நாடு என்றும் பன்முகத்தன்மை கொண்ட, பல்வேறு இனங்கள், மொழிகள், பண்பாடுகளைக் கொண்ட நாடு என்றும் வளரும் நாடுகளில் ஒன்று என்பதை அறிவோம்.

இங்கிலாந்து பிரதமர்களில் ஒருவராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் கூட, இந்த பன்முகத் தன்மை இந்தியாவுக்கு பாதகமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார். ஒரே நாடாக தொடர்ந்து இருப்பது குறித்தும் கேள்விகளை எழுப்பினார். அதனை புறம்தள்ளிவிட்ட இந்தியா, 1990களில் அமெரிக்கா – ரஷ்யா இடையிலான பனிப்போர் முடிவுக்கு வந்த நேரத்தில்,  மூன்றாம் உலக நாடுகளில் ஒன்றாகத் தான் இருந்தது. பின்னர், பொருளாதாரக் கொள்கையில் பின்பற்றப்பட்ட தளர்வு, கடந்த 20 ஆண்டுகளில் துரித வளர்ச்சிப் பணிகள் காரணமாக வளரும் நாடுகளில் ஒன்றாக மாறி இருக்கிறது. என்றாலும் கூட இன்னும் அப்துல் கலாம் இலக்கை எட்ட இயலவில்லை.

வளரும் நாடா இந்தியா?

தொழிற்துறையில் போதிய வளர்ச்சி இன்மை, மனித வளக் குறியீட்டில் குறைந்து காணப்படும் நாடுகள், வளரும் நாடுகளாகப் பட்டியலிடப்படுகிறது. வளரும் நாடான இந்தியாவில் இதயமாக கருதப்படும் கிராமப்புறங்களைப் பார்த்தால், வளர்ச்சி என்பது எட்டாக் கனியாகவே இருக்கிறது. வீடுதோறும் மின்சாரம், குடிநீர் கிட்டாத வீடுகள் இப்போதும் இருக்கின்றன. கான்கிரீட் வீடுகள் இன்னும் கனவாகவே இருக்கிறது. விவசாயிகள் தங்கள் விளை பொருளுக்கு போதிய விலை கிடைக்காமல் தவிப்பது , பசி பட்டினி, அனைவருக்கும் கல்வி கிடைக்காத நிலை நீடிக்கிறது. நகர்ப்புறங்களில் இன்னும் தன்னிறைவைப் பெறவில்லை. சாலைகளில் ஓடும் கழிவு நீர், மலைபோல் குவியும் குப்பைகள், சில மணி நேர மழையில் தத்தளிக்கும் மாநகரங்கள் என்ற நிலையே நீடிக்கிறது. வளர்ந்த நாடுகளில் வாக்குறுதிகள் செயல் திட்டங்களை முன்வைத்து மக்கள் வாக்களிக்கும் நேரத்தில், இந்தியாவில் கிராமம் முதல் நகரங்கள் வரை நோட்டுக்கு ஒட்டு என்ற கலாச்சாரமே விரவிக் கிடக்கிறது.

அதே நேரத்தில் தொழில்துறையில் அபரிமித வளர்ச்சி, அதிக வருவாய் ஈட்டும் நாடு, பொருளாதாரத்தில் வளர்ச்சி, அதிக தனிநபர் வருவாய், நல்ல வாழ்க்கைத் தரம், உள்கட்டமைப்பு வசதிகள், அதிக மனித வளர்ச்சிக் குறியீடு உள்ள நாடுகளை வளர்ச்சி அடைந்த நாடாக குறிப்பிடப்படுகிறது. இந்த வகையில் பார்த்தால், ஜி-7 நாடுகளாக பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் வளர்ந்த நாடுகளாக இருந்தாலும் கூட மனிதவள வளர்ச்சிக் குறியீட்டில் நல்ல நிலையில் இல்லை. ஆனால் மனிதவளக் குறியீட்டில் சுவிட்சர்லாந்து முன்னணியில் இருக்கிறது. உலக வங்கியானது, நாட்டின் ஒட்டுமொத்த வருவாயின் அடிப்படையில் நாடுகளை 4 வகையாகத் தரம் பிரிக்கிறது. ஆண்டுக்கு 70 ஆயிரம் ரூபாய் தனிமனித வருவாய் கொண்ட நாட்டை கீழ்நிலையிலும், 10 லட்சம் ரூபாய் தனி மனித வருவாய் கொண்ட நாட்டை உயர்ந்த நிலையிலும் பட்டியலிடப்படுகிறது. 1947ல் அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு ரூ.4.16 ஆக இருந்தது. இப்போது அது ரூ.78.15 ஆக உயர்ந்திருக்கிறது.

பொருளாதார வல்லுநர்களின் கணிப்பு

உலக வங்கியானது இந்தியாவை, அதன் தனி மனித உருவாய் அடிப்படையில் கீழ் மத்திய நிலைப் (lower-middle) பட்டியலில் வைத்திருக்கிறது. அதாவது, தனி நபர் தேசிய வருவாய் இரண்டரை லட்சம் ரூபாய் வரை உள்ள நாடுகளின் பட்டியலில் சேர்த்துள்ளது. அமெரிக்காவின் தனி நபர் தேசிய வருவாய் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கிறது. அதேபோல் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் அடுத்த ஆண்டு 7 சதவிகிதத்தை எட்டும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால், 2050ம் ஆண்டு வாக்கில், அமெரிக்கா சீனாவுக்கு அடுத்த நிலையில் இந்தியா 3வது இடத்தைப் பெறும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணிக்கிறார்கள்.

வேகமும், விவேகமும்

200 ஆண்டுகள் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியா, இப்போது , அதாவது சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு பின்னர், உலகின் முன்னணி நாடுகளுடன் போட்டி போடத் தொடங்கி விட்டது. இது போதுமானதா என்றால் நிச்சயம் இல்லை. ஆனால் புலிப்பாய்ச்சலுடன் கூடிய ஊழலற்ற உறுதியான, இலக்கை நோக்கி முன்னேறும் திறனுடைய நிர்வாகம் மத்தியிலும் மாநிலங்களிலும் நடைபெற்றால் , கூட்டுறவுடன் மத்திய அரசும் மாநில அரசுகளும் செயல்பட்டால் மட்டுமே வல்லரசு என்ற கனவு நிச்சயம் நிறைவேறுவது உறுதி.

– ஜெயகார்த்தி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

புதுக்கோட்டை தேர் விபத்து தொடர்பாக 2 பேர் கைது

G SaravanaKumar

தப்பான விலாசத்துல கேட்கிறீங்க: சீமானை சீண்டும் தருமபுரி எம்.பி.

Halley Karthik

சொத்துக்காக பெற்றோரைக் கொலை செய்யத் திட்டம்

Halley Karthik