மத்திய அரசாக இருந்தாலும் மாநிலத்தில் எங்களது வேகத்தைக் குறைக்க திமுக அரசு முயற்சி செய்து வருவதாகத் தமிழ்நாடு பாஜக முன்னாள் எம்.பி நரசிம்மன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக முன்னாள் எம்.பி நரசிம்மன் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், சுதந்திர தினத்தன்று சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. மத்திய அரசாக இருந்தாலும் மாநிலத்தில் எங்களது வேகத்தைக் குறைக்க திமுக அரசு முயற்சி செய்து வருவதாகக் குற்றச்சாட்டு தெரிவித்தார். மேலும், கே.பி.ராமலிங்கம் கைது சம்பவம் கண்டிக்கத்தக்கது எனத் தெரிவித்த அவர், ஓசூருக்கு அவர் வந்து பாரத மாதா கோயில் சென்று வழிபட்டது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம். அவர் வருகிறார் என்று தெரிந்து அந்த கோயிலை மாவட்ட நிர்வாகம் பூட்டுப் போட்டுச் சென்றுள்ளது எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், மாவட்ட ஆட்சியர் தனது செல்போனை ஆஃப் செய்து விட்டார். பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ளாமல் தமிழ்நாடு அரசு இதுபோன்ற வழியைக் கையாண்டு வருகிறது. இதே போலப் பல தொல்லைகளை திமுக அரசு கொடுத்து வருகிறது எனக் கூறிய அவர், சீப்பை ஒளித்து வைத்தால் திருமணத்தை நிறுத்த முடியாது. பாஜக ஆட்சிக்கு வருவதை திமுகவால் தடுக்க முடியாது எனக் கூறினார்.
மேலும், திமுக அழிவு கட்சியாக மாறிவிட்டது எனத் தெரிவித்த அவர், அரசியலில் முதிர்ந்த நபர் மு.க.ஸ்டாலின். அவரது ஆட்சியில் இதுபோன்ற கைது நடவடிக்கை கண்டிக்க தக்கது. அமைச்சர் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது இதுபோன்ற விரும்பத் தகாத சம்பவத்தை பாஜக ஒரு போதும் அனுமதிக்காது எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த சம்பவம் குறித்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெளிவாக விளக்கம் அளித்து விட்டார். இவ்வளவு நாள் பாஜகவிலிருந்து விட்டு அரை மணி நேரத்தில் திமுகவில் ஐக்கியமாகிறார் டாக்டர் சரவணன். இதன் அரசியல் புரியவில்லை. தயவுசெய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கூறினார்.








