சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை இனிமேல் திராவிட கால்வாய் என்றே அழைப்போம் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, மதுரை பழங்காநத்தத்தில் திராவிடர் கழகம் சார்பில் திறந்த வெளி மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இராமர் பாலம் விவகாரத்தில் அறிவியல் பூர்வமாக எதும் நிரூபிக்கவில்லை எனக் கூறினார். சேது சமுத்திரத் திட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் புராதனம், நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கி உள்ளதாக கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் பேசிய தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் சேது சமுத்திர கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும் என உறுதி கூறினார். தொடர்ந்து பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, சேது சமுத்திர கால்வாய் திட்டத்திற்கு மதச்சாயம் பூசக் கூடாது என்றார். தமிழ்நாட்டு மக்களுக்கு பாஜக துரோகம் செய்துள்ளதாகவும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறாது என சாபம் விடுவதாகவும் கூறினார்.
திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி பேசுகையில், சேது சமுத்திரத் திட்ட கால்வாயை இனிமேல் திராவிட கால்வாய் என்றே அழைப்போம் எனக் கூறினார். சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி மாநில அளவிலான பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும், பிப்ரவரி 3ம் தேதி ஈரோட்டில் பிரச்சாரத்தை துவங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.