பொங்கல் கொண்டாடும் தமிழ் இந்துக்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு தொகை வழங்க வேண்டும் என அர்ஜுன் சம்பத் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள இந்து மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 2020 தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கான திட்டம் தங்களிடம் உள்ளதாகவும் கூட்டணி குறித்து வரும் 23ம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.
ரஜினிகாந்த் உடல் நிலை காரணமாக அரசியலுக்கு வரவில்லை என கூறியுள்ளார். ஆனால், ஆன்மிக அரசியலில் இருந்து அவர் விலகுவதாக கூறவில்லை. அவரை போல், ஆன்மீக அரசியலை முன்னெடுக்கும் எங்களுக்கு 2020ம் ஆண்டு தேர்தலின் போது, ஆதரவு வழங்க ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வலியுறுத்துவோம் என கூறினார்.
ஜனவரி 12 தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு மதுபான கடைகளை மூட வேண்டும் தமிழக அரசை வலியுறுத்திய அவர்,மது விற்பனையை அரசே செய்வது ஏற்புடையது அல்ல என கூறினார். பூரண மது விலக்கை அமல் படுத்த இந்து மக்கள் கட்சி சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார்.தை பூசத்திற்கும் அரசு விடுமுறை அளித்துள்ளது ஒரு சாதனை என குறிப்பிட்ட அர்ஜூன் சம்பத் இது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது போல், தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் விளையாட்டுகளான ரேக்ளா பந்தையம், சேவல் சண்டை உள்ளிட்டவற்றை நடத்த தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். தமிழ் இந்துக்களின் பண்டிகையான பொங்கல் பண்டிகையை திராவிட இயக்கங்கள் மத மாற்றி வருகிவதாக குற்றம் சாட்டிய அர்ஜுன் சம்பத், பொங்கல் பண்டிகையை, கிறிஸ்துவர்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என கூறினார். பொங்கல் பரிசு தொகைகளை பொங்கல் பண்டிகையை கொண்டாடும் தமிழ் இந்து மக்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும். குடும்ப அட்டை தாரர்கள் அனைவருக்கும் வழங்குவது சரியாக இருக்காது எனவும் அவர் கூறினார்.







