தமிழக மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப கட்சி பாகுபாடின்றி அனைவரும் இணைந்து நிற்போம் என்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள், முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனையின் அனைத்து ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், ஊடகம் – பத்திரிகைத் துறையினர் எனப் பல தரப்பினரும் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து மக்களைக் காக்கின்ற பணியில் தன்னலம் கருதாமல் செயலாற்றி வருகின்றனர்.
16 வது சட்டமன்றப் பேரவையில் உறுப்பினர்களாகப் பொறுப்பேற்றுள்ளவர்கள் தேர்தல் களத்தில் வெவ்வேறு கூட்டணிகளில், வெவ்வேறு கட்சி சார்ந்தவர்களாகக் களம் கண்டு வெற்றி பெற்றிருந்தாலும், மக்கள் நலன் காப்பதில் ஒருமித்த சிந்தனையுடன் கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் உள்ளது. எனவே, உறுப்பினர்கள் அனைவரும் அவரவர் தொகுதிக்குச் சென்று, பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு உதவிகளை மேற்கொண்டு, நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் அரசின் முயற்சிகளுக்குத் துணை நிற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தங்கள் தொகுதிகளில், கொரோனாவைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஏதேனும் தொய்வு தெரிந்தாலோ, படுக்கை வசதி – ஆக்சிஜன் – மருந்து தேவை ஆகியவற்றில் நெருக்கடி இருந்தாலோ இந்த அரசின் கவனத்திற்கு விரைந்து கொண்டு வரக் கோருகிறேன். எனது தலைமையிலான அரசு உடனடி நடவடிக்கையினை மேற்கொண்டு மக்களைப் பாதுகாப்பதில் உறுதியான செயல்பாட்டை மேற்கொள்ளும் என்ற உத்தரவாதத்தை அளிக்கிறேன்.
கொரோனா பேரிடரிலிருந்து தமிழகத்தை மீட்பதற்கு ஆளுங்கட்சி – எதிர்க்கட்சி – தோழமைக் கட்சி என்பதைக் கடந்து மக்களின் பிரதிநிதிகளாகச் செயலாற்றுவோம். தமிழக மக்கள் இயல்பு வாழ்க்கை விரைந்து திரும்பிட நாம் அனைவரும் இணைந்து நிற்போம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.




