திமுக முறைகேடாக நடந்தால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கட்டும்- திருமாவளவன் எம்பி

தேர்தல் ஆணையம் பாஜக கட்டுபாட்டில் உள்ள நிலையில் திமுக தேர்தல் விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கட்டும் என திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ்…

தேர்தல் ஆணையம் பாஜக கட்டுபாட்டில் உள்ள நிலையில் திமுக தேர்தல் விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கட்டும் என திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி
வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின்
தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் ஈரோடு கிழக்கு  தொகுதிக்குட்பட்ட சத்யா நகர், கிருஷ்ணம்பாளையம், மரப்பாலம் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

இதனை தொடர்ந்து திமுக அரசின் சாதனை திட்டங்களையும், மத்தியில் பாஜக அரசின் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகள் தொழிலாளர்களுக்கு இடம்பெறாத சலுகைகள் குறித்தும் வாக்காளர்கள் மத்தியில் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்ததாவது..

”ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ்
இளங்கோவன் கை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
பெறுவார்.

பிபிசி நிறுவனம் மீது அதிகாரத்தை பயன்படுத்தி எதிர் தரப்பினரை அச்சுறுத்தியிருப்பது
பிரதமர் மோடி ஆட்சி கொடுங்கோன்மையின் உச்சத்தில் உள்ளது என்பதற்கு  சான்றாக உள்ளது. ஊடகங்களை நசுக்குவது, கருத்துரிமையை பறிப்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது, இதனை அனைத்து கட்சியும் ஒருங்கிணைந்து கண்டிக்க வேண்டும்.

போராட்டத்தை நடத்தி தான் அரசு கவனத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பது
இல்லை. கூட்டணியில் தோழமையுடன் இருப்பதால் முதல்வர் கவனத்திற்கு தேவையான
திட்டம் குறித்து கொண்டு சேர்த்து வருகிறோம்.

இதனையும் படியுங்கள் : திரிபுரா தேர்தலில் இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும்- பிரதமர் மோடி அழைப்பு

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற அறிவிப்பில் கால பொருத்தமும் இல்லை, அரசியல் பொருத்தமும் இல்லை. பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதை தற்போது
அறிவிப்பதற்கு என்ன காரணம்?. அதை அறிவிப்பதற்கான தற்போதைய தேவை என்ன ?

ஆனால் பாஜக அரசு ஈழ தமிழர் பிரச்சினையில் இலங்கையில் உள்ள சிங்கள அரசை அச்சுறுத்தும் நோக்கோடு தலையீடுவதாக தெரிகிறது. இந்திய அரசின் பின்னணியில் இருந்து தான் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளதா என்று எண்ணத் தோன்றுகிறது.

ஈரோடு இடைத்தேர்தலில் திமுக தேர்தல் முறைகேடு ஈடுபடுவதாக எதிர்கட்சிகளால் பரப்பப்படுகிறது. தேர்தல் ஆணையம் பாஜக கட்டுபாட்டில் உள்ள நிலையில் திமுக தேர்தல் விதிமுறைகள் மீறினால் அவர்கள்  நடவடிக்கை எடுக்கட்டும்” என திருமாவளவன் தெரிவித்தார்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.