பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீரைக் கூடத் தடையின்றித் தரத் திறனற்ற ஒரு நிர்வாகச் சீர்கேட்டைத் தமிழ்நாடு இதுவரை கண்டதில்லை! தமிழகத்தின் 15 முக்கிய அணைகளில் கடந்த ஆண்டு 87.8% ஆக இருந்த நீர் இருப்பு, இந்த தவெக ஆட்சியில் வெறும் 35.36% ஆகப் பாதாளத்திற்குச் சரிந்துள்ளது. தலைநகர் சென்னையின் குடிநீர் ஏரிகளிலும் 37% மட்டுமே நீர் மிஞ்சியுள்ளது. தென்மேற்குப் பருவமழை பொய்த்துப் போகும் அபாயம் முன்கூட்டியே தெரிந்திருந்தும், எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் தவெக அரசு நிர்வாகம் முற்றிலுமாக முடங்கிக் கிடக்கிறது!
அண்ணன் சீர், மாமன் சீர் எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்… மக்கள் தொண்டை வறண்டு தவிக்கும் போது, இந்தத் தண்ணீர் பஞ்சத்தைப் போக்க இந்த ‘க்யூட் சிஎம்’ உருப்படியாகச் செய்தது என்ன? தினமும் அரசு செலவில் கேமராவுக்கு போஸ் கொடுத்து ரீல்ஸ் போடும் இந்த ‘ரீல்ஸ் சிஎம்’, தென்மேற்குப் பருவமழை பொய்த்துப் போகும் அபாயம் தெரிந்தும் அணைகளையும் நீர்நிலைகளையும் பாதுகாக்க ஒரு துரும்பையாவது அசைத்தாரா?
கடும் வறட்சி காரணமாகப் பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டைப் பகுதிகளில் தென்னந்தோப்புகளைக் காப்பாற்ற லாரித் தண்ணீரை விலைக்கு வாங்கும் அவலநிலைக்கு உழவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். சென்னை மற்றும் கோவையில் நிலத்தடி நீர் அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டதால், சாமானிய மக்கள் லாரி தண்ணீருக்காகத் தங்கள் மாதச் சம்பளத்தைச் செலவு செய்யும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
விளம்பர ஆய்வுகளாலும், சமூக வலைதளப் போலி பிம்பங்களாலும் மக்களின் தாகத்தை மறைத்துவிட முடியாது என்பதை முதலமைச்சர் விஜய் புரிந்துகொள்ள வேண்டும்! நிலத்தடி நீர் பாதாளத்திற்குப் போய், அணைகள் வறண்டு நிற்கும் இந்தச் சூழலில், துரித நடவடிக்கை எடுத்து குடிநீர் விநியோகத்தைச் சரிசெய்யாவிட்டால், பொதுமக்களின் காலிக்குடப் போராட்டமும், உழவர்களின் கோட்டை முற்றுகையும் இந்த அரசின் அஸ்திவாரத்தையே ஆட்டிப்படைக்கும் என எச்சரிக்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




