”இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் அக்.20-ம் தேதி ‘லியோ’ படத்தை தவிர்க்க வேண்டும்” – நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நியூஸ்7 தமிழ் வாயிலாக வேண்டுகோள்!

இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் அக்.20-ம் தேதி லியோ படத்தை தவிர்க்க வேண்டும் என இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினரும், டெலோ தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் நடிகர் விஜய்க்கு நியூஸ்7 தமிழ் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார். …

இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் அக்.20-ம் தேதி லியோ படத்தை தவிர்க்க வேண்டும் என இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினரும், டெலோ தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் நடிகர் விஜய்க்கு நியூஸ்7 தமிழ் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் லியோ. த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம் மேனன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளது. ஆயுத பூஜையை முன்னிட்டு லியோ படம் நாளை (அக் 19) வெளியாக உள்ளது.

லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தொடங்கி அதிகாலை காட்சி வெளியிடுவது வரை பெரும் சிக்கல்கள். முதலில் நேரு விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட லியோ இசை வெளியீட்டு விழாவை படக்குழு ரத்து செய்தது. அத்துடன் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி அளிக்க முடியாது, 9 மணிக்கு தான் முதல் காட்சி திரையிட வேண்டும் என்பது அரசின் விதி என்றால் அதனை மீற முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதனிடையே இலங்கையில் நாளை ‘லியோ’ படத்தை திரையிட வேண்டாம் என இலங்கை தமிழ் எம்பிக்கள், நடிகர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளதாக ஒரு போலி கடிதம் இணையத்தில் உலா வந்தது. அதில், ‘அன்றைய தினம், நாட்டை விட்டு வெளியேறிய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு ஆதரவாக போராட்டம் நடத்தப்படவுள்ளது.  படம் வெளியானால் போராட்டத்திற்குப் பின்னடைவாக இருக்கும்’ என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் லியோ திரைப்பட விவகாரம் தொடர்பாக இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினரும், டெலோ தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் நடிகர் விஜய்க்கு நியூஸ் 7 தமிழ் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறியதாவது, ”லியோ திரைப்படம் தொடர்பாக இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், டெலோ உறுப்பினர்கள் கையெழுத்துடன் இன்று கடிதம் வெளியாகியுள்ளது. அது போலியான கடிதம்.

எங்களுடைய கையெழுத்தை அக்கடிதத்துடன் சேர்த்து அனுப்பியுள்ளனர். அதே நேரத்தில் இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் மிக மோசமான வன்முறைகள் நடைபெறுகிறது. புத்த பிக்குகள் உள்ளிட்ட இனவாதிகளின் மிக மோசமான செயல்பாட்டை கண்டித்து அக்டோபர் 20-ம் தேதி கடையடைப்பு நடைபெறவுள்ளது. கொழும்பில் படம் திரையிடுவதில் ஆட்சேபனை இல்லை. ஆனால் 20-ம் தேதி இலங்கை வடக்கு, கிழக்கில் லியோ படத்தை தவிர்க்க வேண்டும்.

இலங்கை வடக்கு, கிழக்கில் சனிக்கிழமை லியோ வெளியிடுவதில் பிரச்னை இல்லை. எனவே தயவு செய்து 20-ம் தேதி படத்தை நிறுத்தி எங்களுக்கு ஆதரவு தருமாறு பணிவாக கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.