2023ஆம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜனவரி 9ஆம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ”ஜனவரி 9ஆம் தேதி காலை 10 மணியளவில், சட்டப்பேரவையை கூட்டவும், உரை நிகழ்த்தவும் ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி அளித்துள்ளார். அன்றைய தினமே அலுவல் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு, எத்தனை நாட்கள் கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்படும்.
இந்த கூட்டத்தொடரில் பங்கேற்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். ஆளுநர் உரை முழுமையாக நேரலையில் ஒளிபரப்பப்படும். அனைத்து நிகழ்ச்சிகளையும் நேரலையில் ஒளிபரப்ப முயற்சி செய்து வருகிறேன். தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இடையே அமைச்சர் உதயநிதிக்கு இருக்கை வழங்கப்படும். துணை எதிர்கட்சி தலைவராக ஒபிஎஸ் நீடிக்கிறார்” என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த அக்டோபர் 17 – 19 ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. இந்த கூட்டத்தொடரில், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.







