80,90 – களில் கிரிக்கெட் ரசிகர்களின் கனவு நாயகர்களாக விளங்கிய, பல்வேறு ஜாம்பவான்கள் உள்ளடங்கிய லெஜன்ட் லீக் கிரிக்கெட் தொடர் சீசன் 2 குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
கிரிக்கெட் போட்டிகள் மீதான ஆர்வம் மற்றும் சமீப காலமாக கிரிக்கெட் விளையாட்டின் வளர்ச்சி என்பது, உலமெங்கும் அபரிமிதமாக வெற்றி பெற்றுள்ளது .மற்ற விளையாட்டை காட்டிலும், கிரிக்கெட் விளையாட்டின் மீதான நாட்டம் இளைஞர்கள் முதல், முதியவர்கள் வரை அதிகரித்து செல்கிறது. தனக்கு விருப்பமான அணியோ அல்லது வீரரோ குறித்த நெருக்கமான உணர்வுகள் தான் ஒவ்வொரு ரசிகர்களின் ஆசை.இந்த எண்ணம் தான் வீரர்களை மீண்டும் கலத்தில் சந்திக்க வேண்டும் எண்ணத்தை தூண்டுகிறது. அந்த வகையில் பல்வேறு அணிகளினுடைய ஜாம்பவான்கள் உள்ளடக்கிய கிரிக்கெட் தொடர், லெஜன்ட் லீக் கிரிக்கெட் என்ற பெயரில் இந்தியாவில் தொடங்கப்பட்டது. முதல் சீசன் அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து, கொரோனா காலத்திற்கு பின்னர் தற்போது இரண்டாவது சீசன் தொடரானது, இந்த மாதம் மீண்டும் தொடங்க உள்ளது. இந்தியாவே எதிர்பார்த்து கொண்டிருந்த லெஜன்ட் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இந்த மாதம் 16 ஆம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது .இத்தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கி, லக்னோ, புது டில்லி, கட்டாக், ஜோத்பூர் என 5 நகரங்களில் நடத்தவும், பிளே ஆப் மற்றும் இறுதிப் போட்டி டேராடூன் – இல் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளன.கிரிக்கெட் ஜாம்பவான்களை உள்ளடக்கிய, ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்களுக்காகவே பிரத்யேகமாக நடத்தப்படும் இந்த கிரிக்கெட் தொடரில் 4 அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஒரு அணியில் 18 முதல் 25 வீரர்கள் விளையாடவும், ஒவ்வொரு அணியிலும் குறைந்தபட்சம் 6 இந்திய வீரர்கள் விளையாடவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இந்திய அணிக்கு அதிரடி ஆட்டக்காரராக விளங்கிய வீரேந்திர ஷேவாக் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்றிருக்கிறார். பந்து வீச்சாளர் இர்பான் பதான் பில்வாரா கிங்ஸ் அணிக்கு கேப்டனாகவும், கவுதம் கம்பீர் இந்தியா கேபிடல்ஸ் அணிக்கு கேப்டனாகவும், மனிபால் டைகர்ஸ் அணிக்கு ஹர்பஜன் சிங் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
1.விரேந்திர சேவாக் தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸ் அணியில் பார்திவ் படேல், அஜந்தா மெண்டிஸ், மன்விந்தர் பிஸ்லா, அசோக் டிண்டா, லென்ட்ல் சிம்மன்ஸ், டேனியல் வெட்டோரி, கெவின் ஒ பிரின், ஸ்டுவர்ட் பின்னி, மிட்செல் மெக்லகன், எல்டன் சிகும்புரா, கிரிஸ் டிரம்லெட், ரிச்சர்ட் லெவி, ஜோகிந்தர் சர்மா, கிரீம் ஸ்வன் உள்ளிட்டோர் விளையாட உள்ளனர்
2. கெளதம் கம்பீர் தலைமையிலான இந்தியா கேபிடல்ஸ் அணியில் மஷ்ரஃப் மோர்டசா, ஹாமில்டன் மசகட்சா, ரஜத் பாட்டியா, லியாம் பிளங்கட், மிட்செல் ஜான்சன், அஸ்கர் ஆப்கான், ரவி போபாரா, பிரவின் தம்பே, தினேஷ் ராம்டின், ஃபர்வீஸ் மஹரூப், அக்குவஸ் காலிஸ், பங்கஜ் சிங், ஜான் மூனி, பிராஸ்பர் உசெயா, ராஸ் டெய்லர், ஜாக் காலிஸ் உள்ளிட்டோர் விளையாட உள்ளனர்.
3. இர்பான் பதான் தலைமையிலான பில்வாரா கிங்ஸ் அணியில் யூசுப் பதான், மான்டி பனேசர், நமன் ஓஜா, வில்லியம் போர்ட்டர்ஃபீல்ட், ஷேன் வாட்சன், எஸ் ஸ்ரீசாந்த், நிக் காம்ப்டன், மாட் பிரியர், சமித் படேல், பிடல் எட்வர்ட்ஸ், சுதீப் தியாகி, டினோ பெஸ்ட், ஓவைஸ் ஷா, டிம் பிரெஸ்னன் உள்ளிட்டோர் விளையாட உள்ளனர்.
4. ஹர்பஜன் சிங் தலைமையிலான மனிபால் டைகர்ஸ்ஸ் அணியில் பிரட் லீ, முத்தையா முரளிதரன், பில் மஸ்டார்ட், முகமது கைஃப், பர்விந்தர் அவானா, ரீதிந்தர் சிங் சோதி, ரொமேஷ் கலுவிதாரண, டிமித்ரி மஸ்கரென்ஹாஸ், லான்ஸ் க்ளூசனர், ரியான் சைட்போட்டம், விஆர்வி சிங் உள்ளிட்டோர் விளையாட உள்ளனர். நான்கு அணிகளும் தலா 12 முதல் 17 வரையிலான வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், மீதம் இருக்க கூடிய ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, பிரெயின் லாரா, விவிஎஸ் லக்ஷ்மன் ஆடம் கில்கிறிஸ்ட், சஹீர் கான், மைக் ஹசி, டேவிட் ஹசி, குமார் சங்ககாரா, கிறிஸ் கெயில், டேல் ஸ்டெயின், மைக்கல் கிளார்க் உள்ளிட்ட பலர் விளையாடும் பட்சத்தில், போட்டிக்கு முன்பு அறிவிக்கப்படுவர்.கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷேன் வார்னே மற்றும் ஆண்ட்ரூ சிம்மன்ஸ் ஆகியோர் காலமானதை அடுத்து, இருவருக்கும் போட்டியின் போது மைதானத்தில் மரியாதை செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 10 வருட காலமாக டி 20 கிரிக்கெட் போட்டிகள் மீதான நாட்டம், கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அளவில் ஆர்வத்தை தூண்டியிருக்கும் நிலையில் ஐபிஎல், பிக் பாஷ் போன்ற தொடர்கள் ஏற்கனவே பெரும் வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில் 80, 90 மற்றும் 2000களில் பார்த்து ரசித்த ஜாம்பவான்கள் சங்கமித்து 4 அணிகளாக விளையாடும் இந்த லெஜன்ட் லீக் தொடரை இம்முறை சுவாரஸ்யம் கூட்டும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.
– நந்தா நாகராஜன்