அண்ணாமலை மீது வழக்கா? அமைச்சர் நாசர் பதில்

ஊழல் குற்றச்சாட்டு குறித்து தவறான கருத்துக்களை தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர்வது குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார் என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.  சென்னை நந்தனம் ஆவின் அலுவலகத்தில், அதிகாரிகளுடன்…

ஊழல் குற்றச்சாட்டு குறித்து தவறான கருத்துக்களை தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர்வது குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார் என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். 

சென்னை நந்தனம் ஆவின் அலுவலகத்தில், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது பேசிய அவர், ஜூன் 7-ம் தேதி உலக உணவு பாதுகாப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. பாதுகாப்பான உணவு, நல்ல உடல்நலன் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு துறையில் தமிழ்நாடு அரசின் செயல்பாட்டை பாராட்டி, ஒன்றிய அரசு, இந்தியாவிலேயே முதல் மாநிலத்துக்கான பரிசை வழங்கியுள்ளது. கடந்த ஓராண்டில் தமிழ்நாட்டில் உணவுப் பாதுகாப்பு சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2,3 தினங்களாக நிலவி வந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை- பால்வளத்துறை கூட்டு ஆலோசனை நடைபெற்றுள்ளது. Health Mix-ஐ ஆவினிடம் கேட்கலாம் என்று கருத்து எழுந்தது, அது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. ஆனால் ஆவின் நிர்வாகம் இதுவரை அதை தயாரிக்கவில்லை. ஏதோ ஆவினில் Health Mix தயாராக இருப்பதாகவும், அதை மக்கள் நல்வாழ்வுத்துறை, வாங்க மறுப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருப்பது வருத்தத்துக்குரியது.

மக்கள் நல்வாழ்வுத்துறை வழங்கி வரும் கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகத்தையும் ஆவின் மூலம் தயாரிக்கலாமா? என்பதற்கான சாத்தியக்கூறுகள ஆராய்ந்து வருகிறோம். பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதே அரசின் எண்ணம்.

என்னை சந்திக்க எந்த செவிலியர் சங்கங்களும் வரவில்லை, வந்தால் சந்திக்க தயார். நிதிநிலையைப் பொருத்து படிப்படியாகத் தான் பணி நிரந்தரம் செய்ய முடியும். ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது. MRB மூலம் தற்காலிகமாக பணிக்கு வந்தவர்களை மட்டுமே பணி நிரந்தரம் செய்ய முடியும். பணி நிரந்தரம் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. யாருடைய தூண்டுதலின் பேரிலும் வெயிலில் உடலை வருத்திக்கொண்டு செவிலியர்கள் போராட வேண்டாம். செவிலியர்களுக்கு அரசு துணை நிற்கும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் நாசர், ஒரு சில அரசியல் தலைவர்கள் தங்களை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதால் தவறான கருத்துக்களை விளம்பரத்துக்காக பேசிவருகின்றனர். ஊட்டச்சத்து பெட்டகத்துக்கும், ஆவின் தயாரிக்கப்போகும் Health Mix-க்கும் வேறுபாடுகள் உள்ளன என்று சட்டமன்றத்திலேயே தெரிவிக்கப்பட்டது.

தீபாவளிக்கான இனிப்புகள் கூட ரூ.87 கோடிக்கு ஆவினில் தான் வாங்கப்பட்டன. இதற்கு காரணம் முதலமைச்சர் தான். பொங்கல் தொகுப்புக்கான நெய் கூட ஆவினில் தான் வாங்கப்பட்டன. மக்கள் நல்வாழ்வுத்துறை வழங்கும் நெய்யும் ஆவினில் தான் வாங்கப்படுகிறது . நாங்கள் இன்று பதில் தருவதே அண்ணாமலைக்கு விளம்பரம் தான். அண்ணாமலை மீது வழக்கு தொடர்வது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.