பல்வேறு தரப்பினர்களிமிருந்து எதிர்ப்பு வந்த நிலையி்ல், தனக்குத்தானே திருமணம் செய்துகொள்ளும் பெண் கோயிலில் திருமணம் செய்யும் தன்னுடைய முடிவை மாற்றியுள்ளார்.
குஜராத்தில் உள்ள பரோடா பகுதியைச் சேர்ந்தவர் ஷாமா பிந்து. எம்.எஸ். பல்கலைக்கழகத்தில் சோஷியாலஜி பட்டம் பெற்றுள்ளார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 24 வயதான ஷாமாவும் மற்ற இந்திய பெண்களைப் போலவே ஜூன் 11ஆம் தேதி நடைபெறவுள்ள தன்னுடைய திருமணத்துக்கும் தயாராகி வருகிறார். திருமணத்துக்கான பிரேத்யேக ஆடை மற்றும் அனைத்து சம்பிராதாயங்களும் இவருடைய திருமணத்தில் நடைபெறவுள்ளது. இவருடைய திருமணத்தில் பங்கேற்க சில உறவினர்களையும் இவர் அழைத்துள்ளார்.
இந்த திருமணத்தில் மணமகன் மட்டுமே இல்லையே தவிர மற்ற அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. பெண் ஒருவர் தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ளும் இந்நிகழ்வு முதல்முறையாக குஜராத்தில் நடைபெறவுள்ளது. மேலும், திருமண நிகழ்வில் ஒன்றான மெஹந்தி நிகழ்ச்சி ஜூன் 9ஆம் தேதியும், திருமணம் ஜூன் 11ஆம் தேதி மாலை 5 மணிக்கும் நடைபெறவுள்ளது. திருமணம் முடிந்த பின்னர் இரண்டு வாரம் ஷாமா ஹனிமூனுக்கு கோவாவுக்கு செல்லவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இத்திருமணத்துக்கு பாஜக நகரப் பிரிவு துணைத் தலைவர் சுனிதா சுக்லா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், ஷாமா பிந்து சோலோகேமி முறையில் கோயிலில் திருமணம் செய்துகொள்ள விடமாட்டோம். இத்திருமணம் இந்து மதத்திற்கு எதிரானது. இந்து கலாசாரத்தில் பெண் பெண்ணையும், ஆண் ஆணையும் திருமணம் செய்துகொள்ளும் முறை உள்ளதாக அப்பெண் கூறுகிறார். ஷாமா ஒரு மனநிலை சரியில்லாதவர். அவர் சோலோகேமி முறையில் திருமணம் செய்துகொள்ள எந்த கோயிலிலும் அனுமதிக்கக் கூடாது. இது இந்து மக்கள் தொகையைக் குறைத்துவிடும் என்று அண்மையில் தெரிவித்திருந்தார்.
ஷாமா பிந்து தனது திருமணம் குறித்து அறிவித்த நாளில் இருந்தே பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகிறார். இந்நிலையில், ஷாமாவின் தன்னைத்தானே திருமணம் செய்து நிகழ்வுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்தும், எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர். ஆனாலும், இவை எதுவும் ஷாமா பிந்துவை தடுக்கவில்லை. அவர் தன்னுடைய திருமணத்தை சட்டப்பூர்வமாக நடத்தும் வழியைத் தேடிக் கொண்டிருக்கிறார்.
இதுகுறித்து ஷாமா பிந்து கூறுகையில், மற்ற பெண்களைப் போலவே நானும் என் திருமணத்தை பதிவு செய்துகொள்ள விரும்புகிறேன். சுயதிருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி இல்லாமல் இருக்கலாம். ஆனால் அது சட்ட விரோதம் கிடையாது. இருவருக்குத் திருமணப் பதிவு என்பது செய்யப்படும்போது, அதேயே ஏன் என்னால் செய்ய முடியாது. சட்டப்பூர்வமாக என்னுடைய திருமணத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன். தேவைப்படும்பட்சத்தில் வழக்கறிஞர்களிடம் இதுகுறித்து ஆலோசிப்பேன். வீட்டில் தான் எப்போதும் அதிக நேரம் இருப்பேன். இப்போது என்னை அதிக அளவிலானோர் தேடி வருகின்றனர். இதனால், பக்கத்து வீட்டுக்காரர்கள் அதிக நபர்கள் வருவதாக புகார் தெரிவித்து வருகின்றனர்.
கோவிலில் திருமணம் செய்ய பல்வேறு எதிர்ப்புகள் வந்துள்ளன. நான் யாருடைய மதத்தையும், நம்பிக்கையையும் புண்படுத்த விரும்பவில்லை. அதனால், என்னுடைய திருமணத்தை வேறு இடத்தில் நடத்த திட்டமிட்டுள்ளேன். எனக்கு முதலில் திருமணம் செய்துவைக்க ஒப்புக்கொண்ட பூசாரி இப்போது திருமணம் செய்துவைக்க முடியாது எனத் தெரிவித்துவிட்டார். அதனால், மந்திரங்களை டேப் ரெக்கார்டரில் போட்டு திருமணம் செய்துகொள்ளவுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.
-ம.பவித்ரா








