தமிழ் நாட்டின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று பதவியேற்றார். அவருக்கு தமிழ் நாடு ஆளுநர் ஆர்.வி.அர்லேக்கர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தலைமை செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் எம். சாய்குமார், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க. மணிவாசன், காவல்துறை தலைமை இயக்குநர் சந்தீப் ராய் ரத்தோர், முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர் செந்தில்குமார், பொதுத் துறை முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், முதலமைச்சரின் செயலாளர் ஜி. லட்சுமி பிரியா மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக முதலமைச்சராக பதவியேற்ற பின் பேசிய விஜய், “பெண்களுக்கான பாதுகாப்பை கண்டிப்பாக உறுதி செய்வேன், போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க நடவடிக்கை எடுப்பேன். சட்டஒழுங்கை உறுதி செய்வேன்” என்று தெரிவித்திருந்தார்.
அதே போல பதவியேற்பு விழா மேடையிலேயே அவர் 3 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ திட்டம், போதைப் பொருள் புழக்கத்தை தடுக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் போதை பொருள் தடுப்புப் படை திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.







