அன்பு, சமத்துவம் மட்டுமே தமிழர் தத்துவம் என்று வடமாநிலத் தொழிலாளர்கள் பிரச்னை குறித்து இயக்குநர் நவீன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சமீபகாலமாகவே வடமாநிலத்தவர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையேயான பிரச்னை தொடர்ந்து வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள், தமிழக தொழிலாளர்களிடையே மோதலில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
அதே போல, கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மாணவர்களுக்கும், வடமாநில தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மேலும், தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் வடமாநிலத் தொழிலாளர்கள் பணிகளில் ஈடுபடுவதற்கு தொடர்ந்து எதிர்ப்பும் வலுத்து வருகிறது.
இதுகுறித்து, மூடர்கூடம் திரைப்பட இயக்குநர் நவீன் ட்விட்டர் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், வடவர் ஆதிக்கத்தை எதிர்ப்பது சரி. ஆனால் வடக்கிலிருந்து பிழைப்பு தேடி வரும் ஒடுக்கப்பட்ட பாட்டாளி சகோதரர்கள் மீது வன்மத்தை விதைப்பது சரியான அரசியல் அல்ல. இந்த உலகம் அனைவருக்கும் பொதுவானது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதே தமிழர் அறம். அன்பு சமத்துவம் மட்டுமே தமிழர் தத்துவம் ❤️ எனக் குறிப்பிட்டுள்ளார்.
-ம.பவித்ரா








