சமூகநீதிக்காக பாடுபட்டவர் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி – தேஜஸ்வி யாதவ் புகழாரம்!

சமூகநீதிக்காக பாடுபட்டவர் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி என்று பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் புகழாரம் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம், காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடி மதிப்பீட்டில், ஆழித்தேர் வடிவில்…

சமூகநீதிக்காக பாடுபட்டவர் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி என்று பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் புகழாரம் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம், காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடி மதிப்பீட்டில், ஆழித்தேர் வடிவில் 7,000 சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது கலைஞர் கோட்டம். இதில் கருணாநிதியின் உருவச்சிலை, அவரது தந்தை முத்துவேலர் நினைவு நூலகம், கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் அருங்காட்சியகம், கூட்ட அரங்கு உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

இதன் திறப்பு விழாவை சிறப்பாக நடத்துவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்களுக்கு முன்பாகவே சென்னையில் இருந்து திருவாரூர் வந்து விட்டார். நேற்று விழா ஏற்பாடுகளை கவனித்த அவர், இன்று காலையிலும் கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில் நடைபெற்ற கவியரங்கம் மற்றும் பட்டிமன்றம் ஆகிய கலை நிகழ்ச்சிகளிலும் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு சிறப்பித்தது மட்டுமின்றி நிகழ்ச்சிகளையும் முழுமையாக இருந்து கண்டு மகிழ்ந்தார்.

காலை நிகழ்ச்சிகள் முடிந்ததும் உணவு இடைவேளைக்கு பிறகு கலைஞர் கோட்டம் திறப்பு விழா நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது. கலைஞர் கோட்டத்தினையும், கருணாநிதி உருவச்சிலையையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பீகார் துணை முதலவர் தேஜஸ்வி யாதவ் பங்கேற்று முத்துவேலர் நினைவு நூலகத்தை திறந்து வைத்தார்.

முத்துவேலர் நினைவு நூலகத்தை திறந்து வைத்த பின்னர் பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஸ்வி யாதவ் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

சமூக ஏற்ற தாழ்வுகளை களைத்தவர் தான் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி. குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களை – வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பொருளாதார ஏற்ற தாழ்வை சரி செய்தார்.

கலைஞர் திராவிட மாடல், தத்துவத்தை எடுத்துரைத்து நிலை நாட்டினார் (Dravidian ideology). உள்ளாட்சி கட்டமைப்புகளில் பெண்கள் பங்கு வகித்து நிர்வகிக்க முக்கியத்துவம் கொடுத்தார் கலைஞர். கலைஞரின் தலைமையிலான அரசாங்காத்தில் சமூகநீதி நிலை நாட்டப்பட்டு அது நம் நாடு முழுவதும் பேசப்பட்டது. அவரது வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது சமூக நீதியை நிலை நாட்டி வருகிறார் என்பதை எண்ணி பெருமை கொள்வதாக பேசினார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.