கடைசி நேர கட்சி தாவல் – கர்நாடக பாஜகவுக்கு சவாலா?

கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி, சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், துணை முதலமைச்சராக இருந்த லட்சுமண் ஆகிய முக்கிய ஆளுமைகளின், கடைசி நேர கட்சி தாவல்,…

கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி, சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், துணை முதலமைச்சராக இருந்த லட்சுமண் ஆகிய முக்கிய ஆளுமைகளின், கடைசி நேர கட்சி தாவல், பாஜகவுக்கு கடும் சவாலாக மாறியுள்ளதா? அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்…

தென் இந்தியாவில், கர்நாடக மாநிலம் அடிப்படையில் பாஜகவுக்கான களம் இல்லை. ஆனால் 1990 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சிக்கும், ஜனதா கட்சிக்கும் இடையே கடுமையான அரசியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல, மெதுவாக ஊடுருவியது பாஜக என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள். கடந்த 30 ஆண்டுகளில், அம்மாநிலத்தில் 10 ஆண்டுகள் ஆளும் கட்சி, 18 ஆண்டுகள் எதிர்க்கட்சி, மக்களவை தேர்தல்களிலும் சிறப்பான வெற்றிகளை குவித்து வருகிறது பாஜக.

ஆனால் வரும் சட்டமன்ற தேர்தலில் மாற்றம் காணும், ஆட்டம் காணும் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். என்ன ஆயிற்று என பார்த்தால், பாஜகவுக்கு ஆரம்ப காலம் முதல் தோள் கொடுத்து வெளிச்சம் படாமல் உழைத்த கர்நாடக தளபதிகளுக்கு, வயதாகிவிட்டது, தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை என்று பாஜக தலைமை கூறிவிட்டது. இதனால் பதறிப் போன தளபதிகள், கடுமையாக எதிர்த்து அரசியல் செய்த காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமாகியுள்ளனர்.

ஜனசங்கத்திற்கு மிக ஆதரவான குடும்பத்தை சேர்ந்த ஜெகதிஷ் ஷெட்டர், லிங்காயத்து சமுதாயத்தில் எடியூரப்பாவுக்கு அடுத்த முக்கிய தலைவர் ஆவார். முன்னாள் முதலமைச்சராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்தவர் அவர். அமைதியானவரான ஷெட்டர் கட்சிக்கும், ஆட்சிக்கும் எதிரான, கலகக் குரல்களை கட்டுப்படுத்தியவர். எடியூரப்பா தனிக்கட்சி நடத்திய போது கர்நாடக பாஜவை கட்டிக் காத்த அரசியல் காப்பான்.

ஆனாலும் வேட்பாளர் பட்டியலில் ஜெகதீஷ் ஷெட்டர் பெயர் இல்லை. கடந்த சில நாட்களாக அரங்கேறிய அரசியல் நிகழ்வுகள் வேதனை அளிக்கிறது என பொது வெளியில் முதல்முறையாக குமுறினார். கட்சி மேலிடத்தின் சமாதான பேச்சு எடுபடவில்லை. இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் காங்கிரசில் இணைந்தவர், செய்தியாளர்களிடம் பேசுகையில் வரும் தேர்தலில் ஆளும் பாஜக சீட்டுக் கட்டு போல் சரியும் என்கிறார்.

இன்னொருவர், கர்நாடகத்தில் பாஜக வெற்றி கணக்கை ஆரம்பித்த போது எம்.எல்.ஏ வாக தேர்வானவர். கட்சியை மற்ற இதர பிற்படுத்தப்பட்ட மக்களிடம் கொண்டு சென்றவர். முன்னாள் துணை முதலமைச்சரும், மூத்த தலைவருமான ஈஸ்வரப்பா, தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை என்றதும் பதறினார். ஆனால் கட்சி தலைமையோ, உன் மீது ஊழல் வழக்கு உள்ளது என கூறி அவரை அடக்கிவிட்டது என்கின்றனர் ஈஸ்வரப்பா ஆதரவாளர்கள்.

மூன்றாமாவர் சோதனையான காலங்களில் கர்நாடக பாஜக-வுக்கு, அரணாக நின்ற முன்னாள் துணை முதலமைச்சர் லட்சுமண் சாவடி. தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை என்றதும் மனம் வெதும்பிய லட்சுமண் சாவடி, உடனடியாக காங்கிரசில் இணைந்து வேட்பாளராகி விட்டார். முக்கிய தலைவர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்ட விவகாரத்தில் பின்னணியில் இருப்பது முதலமைச்சர் பசவராஜ் பொம்மையும், பிரகலாத் ஜோஷியும் என்று நம்பப்படுகிறது. ஜெகதீஷ் ஷெட்டரின் விலகல் பாஜகவுக்கு 25 தொகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

காங்கிரசோ மிகவும் நேர்த்தியாக செயல்படுகிறது. பிரச்சாரத்தில் பெரும்பாலும் மாநிலம் சார்ந்த பிரச்னைகளில் அதிக முன்னுரிமை அளிக்கிறது. பாஜகவின் அதிருப்தி அலை, தலைவர்களின் விரக்தி, தேர்தல் அறிக்கை போன்றவை தங்களுக்கு சாதகமான அம்சம் என்றும், கர்நாடகத்தில் வென்று ஆட்சி அமைக்கும் என்றும் நம்புகிறது காங்கிரஸ் கட்சி.

பாஜகவோ, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, முதலமைச்சர் பொம்மை ஆகியோரின் கூட்டு வியூகங்கள் எப்படியும் பலனளிக்கும், குஜராத் தேர்தலை போலவே தங்களுக்கு சாதகமாகவே களம் உள்ளது என்கிறது.

ஆட்சியில் ஊழல், சர்ச்சையாகியுள்ள இடஒதுக்கீடு, விலைவாசி உயர்வு, அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள், வாரிசு அரசியல், மற்றொரு புறம் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் செயல்பாடு உள்ளிட்டவையும் முக்கிய காரணிகளாக தேர்தலில் எதிரொலிக்கும். மக்கள் மனதில் யார்? வெல்வது யார்? அரியணையில் அமர்வது யார் என்பதற்கான விடை மே.13 ஆம் தேதி தெரியும்….

– ரா.தங்கபாண்டியன், நியூஸ் 7 தமிழ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.