சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்கும் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு: சிஐடியு தொழிற்சங்கம் நாளை போராட்டம் அறிவிப்பு

சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்கும் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக சிஐடியு தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. சென்னையில் 625 வழித்தடங்களில் மொத்தம் 3 ஆயிரத்து 436 மாநகர பேருந்துகள் தினமும் இயக்கப்பட்டு…

சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்கும் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக சிஐடியு தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

சென்னையில் 625 வழித்தடங்களில் மொத்தம் 3 ஆயிரத்து 436 மாநகர பேருந்துகள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், தினசரி சுமார் 29 லட்சம் மக்கள் பயணம் செய்து வருகின்றனர். மேலும் பெண்களுக்கான கட்டணம் இல்லா பேருந்து சேவை, முதியவர்களுக்கான கட்டணம் இல்லா சேவை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ் உள்ளிட்ட திட்டங்களையும் மாநகர போக்குவரத்துக் கழகம் செயல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது. Gross Cost Contract முறையில் இதை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு மாநகர போக்குவரத்துக்கழகம் மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னையில் தனியார் பேருந்து இயக்கம் குறித்து போக்குவரத்து துறை ஆலோசனை கூட்டத்தில் எடுத்துரைக்கப் பட்டதாகவும், ஆனால் இதற்கான நடைமுறையை அரசு அனுமதிக்கவில்லை என்றும் மாநகர போக்குவரத்துக்கழகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், மாநகர போக்குவரத்துக்கழக சிஐடியு பொதுச் செயலாளர் தயானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் முதற்கட்டமாக 500 வழித்தடங்களில் தனியார் பேருந்துகளை இயக்க ஒப்பந்தம் கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார். மாநகர போக்குவரத்துக்கழகம் தனியார்மயம் நோக்கி செல்லாது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்த நிலையில், தற்போது அரசு சொல்லாததையும் செய்து கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இதனை கண்டித்து நாளை மாநகர போக்குவரத்து கழகத்தின் அனைத்து பணிமனைகளிலும் முதற்கட்ட ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாகவும் தமது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.