கோயிலுக்கு சொந்தமான நிலத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் உள்ள வைத்தியநாத சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான குளத்தின் கரையோரம் பதிமூன்று பேர் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர் இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு அறநிலைய துறையில் அதிகாரிகள் அப்பகுதியில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்த அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு மக்கள் தாமாகவே முன் வந்து கோவில் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டனர். இந்த நிலையில் தற்போது அறநிலையத்துறை அதிகாரிகள் நேற்று இரவு திடீரென வந்து காலை 7 மணிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு போதிய கால அவகாசம் தராமல் அதிகாரிகள் வீடுகளை இடிப்பதில் தீவிரம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில் இன்று காலை ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு உள்ளிட்டவர்களுடன் அறநிலையத் துறையினர் வீடுகளை அப்புறப்படுத்த முயற்சித்தனர். இதையடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென ஒரு பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதையடுத்து போலீசார் அவரை தடுத்து போலீஸ் வாகனத்தில் ஏற்றி உள்ளனர். மேலும் அப்பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுவதால் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.







