கோபா அமெரிக்கா போட்டியில் தோல்வியைத் தழுவிய, பிரேசில் கேப்டன் நெய்மருக்கு வெற்றி பெற்ற அர்ஜெண்டினா கேப்டன் மெஸ்சி ஆறுதல் கூறும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் பிரேசி லில் நடந்து வந்தது. 10 நாடுகள் பங்கேற்ற இந்த தொடரில் பிரேசில், அர்ஜெண்டினா, கொலம்பியா, பெரு ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரை இறுதியில் அர்ஜெண்டினா அணி கொலம்பியாவையும், பிரேசில் பெருவையும் வீழ்த்தின.
இறுதிப்போட்டியில், நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜெண்டினா அணியும் நெய்மர் தலைமையிலான பிரேசில் அணியும் நேற்று மோதின. இதில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அணி மீண்டும் கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதே போல், உலகின் தலைசிறந்த வீரராக கருதப்படும் லியோனல் மெஸ்ஸி, தனது முதல் சர்வதேச கோப்பையை கைப்பற்றியுள்ளார்.
இந்த தொடரில் சிறந்த வீரர்களாக மெஸ்சியும் பிரேசிலின் நெய்மரும் தேர்வு செய்யப்பட் டனர். ‘இந்த தொடரில் இரண்டு வீரர்கள் இருப்பதால், ஒருவரை மட்டும் சிறந்த வீரராக தேர்வு செய்துவது கடினம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அர்ஜெண்டினா அணி கோப்பையை வென்றதும் அந்த அணி வீரர்கள் மெஸ்சியை தூக்கி வைத்துக் கொண்டாடினர். மறுபுறம் தோல்வியடைந்த அணியின் கேப்டன் நெய்மர், குலுங்கு குலுங்கி அழுதார்.
இதைக் கண்ட மெஸ்சி, தனது அணி வீரர்களை விட்டுவிட்டு நெய்மரிடம் சென்று கட்டிப்பிடித்தார். பின்னர், கவலைய விடு நண்பா என்று ஆறுதல் கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.








