புதுச்சேரியில் உயிரிழந்த லட்சுமி என்னும் கோயில் யானையின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். உடற்கூராய்வுக்கு உட்படுத்தப்பட்டபின், லட்சுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
புதுச்சேரி மாநிலத்தில் புகழ்பெற்ற ஸ்தலம் மணக்குள விநாயகர் ஆலயமாகும். இந்த
ஆலயத்தில் லட்சுமி என்ற பெண் யானை வளர்க்கப்பட்டு வந்தது. இது கோயிலுக்கு வரும்
பக்தர்களுக்கும், வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளையும் வெகுவாக கவர்ந்தது. தந்தத்துடன் கூடிய பெண் யானையாக காட்சி தந்த லட்சுமி, காலில் கொலுசு அணிந்தும் முக்கிய நாட்களில் நெற்றிப்பட்டம் அணிந்தும் இந்த கோயிலுக்கு
வரும் பக்தர்களுக்கு ஆசிர்வாதம் அளித்து அனைவரின் அன்பையும் பெற்று வந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இன்று லட்சுமி வழக்கம்போல் காமாட்சி அம்மன் கோயில் வீதியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தது. பின்னர் லட்சுமியின் உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
தொடர்ந்து இன்று மாலை லட்சுமியின் இறுதி ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். மேலும் அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், ஜெயக்குமார், எதிர்க்கட்சித் தலைவர் சிவா உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். ஊர்வலம் செல்லும் வழிநெடுகிலும் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற இந்த இறுதி ஊர்வலம், கடலூர் – புதுச்சேரி சாலையில் உள்ள வனத்துறை இயக்குனரகம் சென்றடைந்தது. அங்கு லட்சுமியின் உடல், உடற்கூராய்வு செய்யப்பட்டது. மெட்ராஸ் கால்நடை மருத்துவக் கல்லூரியில் இருந்து 8 பேர் கொண்டு மருத்துவ குழு மற்றும் புதுச்சேரி கால்நடை மருத்துவ கல்லூரியில் இருந்து 9 பேர் கொண்ட மருத்துவ குழு என மொத்தம் 17 பேர் உடற்கூறாய்வு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து மணக்குள விநாயகர் கோவில் அர்ச்சகர்கள் மஞ்சள், பன்னீர், திருநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு லட்சுமிக்கு பூஜை செய்து, இறுதிச் சடங்கை நடத்தினர். பின் உப்பு, மஞ்சள் தூவி லட்சுமியின் உடல், வனத்துறை இயக்குனரக வளாகம் அருகே உள்ள ஜே.வி.எஸ் நகர் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது, லட்சுமியை பிரிய மனம் இல்லாமல், அதன் பாகன் லட்சுமியை கட்டி அழுதது காண்போரை கண்கலங்கச் செய்தது.