காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை நடைபயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கினார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த நடைபயணம் காஷ்மீரில் நிறைவடைகிறது. அதன்படி பல்வேறு மாநிலங்களைக் கடந்து நடைபயணத்தின் இறுதிப் பகுதியான ஜம்மு காஷ்மீரில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
நேற்று ஜம்மு காஷ்மீரின் பனிஹால் பகுதியில் நடைபயணத்தை தொடங்கிய ராகுல் காந்தியுடன், காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா இணைந்தார். இதையடுத்து அப்பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த அங்கு போதிய அளவு போலீசாரும் இல்லை. இதனால் ராகுல் காந்தியின் பாதுகாப்பு நலன் கருதி, அதிகாரிகள் அவரை பாதுகாப்பு வாகனத்திற்குள் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து ராகுல் காட்ந்தியின் நடைபயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது ட்விட்டர் பக்கத்தில், “ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில், பாதுகாப்பு குழப்பம் ஏற்பட்டதாக கூறிவது வருத்தமளிக்கிறது. பாதுகாப்பு வழங்க வேண்டியது இந்திய அரசாங்கத்தின் தலையாய கடமை. இந்தியா ஏற்கனவே இரண்டு பிரதமர்களையும், பல்வேறு தலைவர்களையும் இழந்துள்ளது. எனவே நடைபயணம் மேற்கொள்ளும் அனைவருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/kharge/status/1618927048155860992
அதேபோல், காங்கிரஸ் எம்.பி ரஜனி பாட்டில், “ராகுல் காந்தியின் நடைபயணத்திற்கு பாதுகாப்பு வழங்க ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் தவறிவிட்டது. இது, நிர்வாகத்தின் ஆயத்தமில்லாத தன்மையை குறிக்கிறது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.







