அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் ஆவணங்களை தலைமை தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தாக்கல் செய்துள்ளது.
சென்னையை அடுத்த வானகரத்தில் கடந்த 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து அதிமுக கட்சி நிர்வாகம் மற்றும் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு வழங்க உத்தரவிடக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தலைமை தேர்தல் ஆணையத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளை எடப்பாடி பழனிசாமி தரப்பினரும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளார். முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார்.
இதனிடையே, வரும் 17ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பழனிசாமியின் இல்லத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
– இரா.நம்பிராஜன்








