கும்பமேளா கூட்டநெரிசல் – காயமுற்றவர்களை நேரில் சந்தித்தார் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் !

மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களை உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்வு நடைபெற்று வருகிறது. கடந்த 14ஆம் தேதி தொடங்கிய கும்பமேளா பிப்ரவரி மாதம் 26ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த ஆன்மிக நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலிருந்தும் கோடிக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு, புனித நீராடி வருகின்றனர்.

இதனிடையே, கடந்த 29ம் தேதி கும்பமேளா நடைபெறும் பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 30 பேர் உயிரிழந்தனர். மேலும், 90க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனை தொடர்ந்து கும்பமேளா நடைபெறும் பகுதியில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மகா கும்பமேளா நடைபெறும் பகுதியை உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஜன.31ம் தேதி ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த நிலையில் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களை உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மருத்துவமனையில் சந்தித்து பேசினார். அப்போது மருத்துவர்களிடம் பேசியவர், காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், காயமடைந்தவர்கள் பாதுகாப்பாக தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதை உறுதி செய்யுமாறு மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வருகைக்கு முன், உத்தர பிரதேச தலைமைச் செயலாளரும், டி.ஜி.பி.யும் மருத்துவமனைக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.