கலைஞர் பல்கலைக்கழக மசோதா விவகாரம் – தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு..!

கும்பகோணம் கலைஞர் பல்கலைக்கழக மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பிய ஆளுநரின் முடிவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழ் நாடு அரசு கும்பகோணத்தில் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி பெயரில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்க முடிவு செய்தது. மேலும் அதற்கான மசோதா ஒன்றினை கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபையில் நிறைவேற்றியது.

அந்த மசோதாவில் ”இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தராக, தமிழ்நாடு முதலமைச்சர் இருப்பார். இணைவேந்தராக உயர் கல்வித்துறை அமைச்சர் செயல்படுவார். மேலும் தேடுதல் குழு வாயிலாக, துணைவேந்தர் நியமனம் செய்யப்படுவார். அதேபோல, வேந்தரின் அனுமதியின்றி கவுரவ பட்டங்களை வழங்க முடியாது எனவும் பல்கலைகழகத்துக்கு மத்திய, மாநில அரசுகள் வாயிலாகவும், பல்கலைக்கழக மானியக்குழு வாயிலாகவும் நிதி வழங்கப்படும். மேலும், கட்டணம், மானியம், நன்கொடை, பரிசுகள் வாயிலாக, நிதி ஆதாரங்களை பெறலாம்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆளுநரின்  ஒப்புதலுக்காக இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில் ஆளுநரின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு  வழக்கறிஞர் மிஷா ரோத்தஹி மூலம் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

அதில் கும்பகோணத்தில் உள்ள கலைஞர் பல்கலைக்கழகம் தொடர்பான மசோதா விவகாரத்தில் மசோதாவை குடியரசு தலைவர் முடிவுக்காக அனுப்பிய தமிழ்நாடு ஆளுநரின் நடவடிக்கை என்பது சட்டப்பேரவையின் முடிவுக்கு எதிரானது. ஆகவே இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.