முக்கியச் செய்திகள் உலகம் கட்டுரைகள் செய்திகள்

இலங்கை, பாகிஸ்தானுக்கு சீனா கட்டாயக் கடன்- விளைவுகள் குறித்து இந்தியாவை எச்சரிக்கை செய்யும் அமெரிக்கா


எஸ்.இலட்சுமணன்

கட்டுரையாளர்

“கடன் அன்பை முறிக்கும்” வாடிக்கையாளர்கள் கடன் கேட்பதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக சில கடைகளில் இந்த வாசகம் தாங்கிய போர்டுகள் மாட்டப்பட்டிருக்கும். ஆனால் இலங்கைக்கும், பாகிஸ்தானுக்கும்  சீனா கொடுத்திருக்கும் ”கட்டாய கடன் வம்பை வளர்க்கும்” என எச்சரிக்கிறது அமெரிக்கா. இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கையிலும், பாகிஸ்தானிலும் கடன்கள் மூலமான கட்டாய அந்நியச் செலவாணியை ஏற்படுத்தி அதன் மூலம் அவ்விருநாடுகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க சீனா முயல்வதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. 

இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கையும், பாகிஸ்தானும் வரலாறு காணாத அளவிற்கு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றன. அந்நியச் செலவாணி கையிருப்பு சரிந்ததால் கடந்த ஆண்டு பொருளாதார சீர்குலைவு இலங்கையில் ஏற்பட்டது. பெட்ரோல், டீசல், மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களைகூட இறக்குமதி செய்யமுடியாமல் இலங்கை தவித்தது. இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கடந்த மே மாதம்,  வாங்கிய கடனுக்கான வட்டியாக 78 மில்லியன் டாலரைக்கூட கொடுக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த பொருளாதார நெருக்கடி எதிரொலியாக மக்கள் புரட்சி வெடித்து இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ராஜபக்சாக்களின் அரசியல் சாம்ராஜ்யம் வீழ்ந்த நிலையில் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதிபராகவும், நிதியமைச்சராகவும் இருந்துகொண்டு பொருளாதார நெருக்கடியை போக்க பல்வேறு நடவடிக்கைகளை ரணில் விக்ரமசிங்கே மேற்கொண்டு வருகிறார். கடந்த ஆண்டைப்போல நிலைமை மிகவும் மோசமாக இல்லாவிட்டாலும் இன்னும் இலங்கை பொருளாதார நிலைமை  சீரடையவில்லை. வரும் 9ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு தேவையான போதிய நிதி இல்லாததால் அந்த தேர்தலை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி இன்னும் சீராகவில்லை என்பதற்கு இதுவோ ஒரு சாட்சி.

இந்தியாவின் மற்றொரு அண்டை நாடான பாகிஸ்தானிலும் தற்போது பொருளாதார நிலை கடுமையாக சீர்குலைந்துள்ளது. இலங்கையைவிட பரப்பளவில் 12 மடங்கும், மக்கள் தொகையில் 10 மடங்கும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 மடங்கும் பெரிய நாடு பாகிஸ்தான். எனினும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி என்கிற நிலையில் தற்போது இரு நாடுகளும் ஒரே இடத்தில் நிற்கின்றன. வெளிநாட்டு கடன்கள்  பெறுவது, சர்வதேச கண்காணிப்பு நிதியின் நிதி உதவியை எதிர்பார்ப்பது என இரு நாடுகளும், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டும் வர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

சர்வேத கண்காணிப்பு நிதியத்திடமிருந்து 1.1 பில்லியன் டாலர் நிதி உதவியை பெற முயற்சித்து வரும் பாகிஸ்தான் ஐஎம்எஃப் விதிக்கும் நிபந்தனைகளுக்கு ஏற்ப பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில்  அதிரடி சிக்கன நடவடிக்கைகளும் அடங்கும். இனி பாகிஸ்தான் அமைச்சர்கள் தங்களது மின் கட்டணம், தொலைபேசி, தண்ணீர், சமையல் எரிவாயு கட்டணங்களை தாங்களே கட்ட வேண்டும் என்பது உள்பட பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்தார்.

இதற்கிடையே பொருளாதார நிலைமையை சமாளிப்பதற்காக சீனா மற்றும் அந்நாட்டு வங்கிகளிடமிருந்து அதிக அளவு கடன்களையும் பெற்று வருகிறது பாகிஸ்தான். ஏற்கனவே சீனாவிற்கு பாகிஸ்தான் 30 பில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் ரூ.2,49,000 கோடி) அளவிற்கு கடன் கொடுக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் புதிதாக 700 மில்லியன் டாலர் கடனை சீன வளர்ச்சி வங்கியிடமிருந்து பாகிஸ்தான் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு அதிக அளவு கடன்களை கொடுத்து அவ்விரு நாடுகளையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க சீனா முயல்வதாக அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் டொனால்டு லு குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவில் நடைபெறும் g20 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்டன் வரும் 1ந்தேதி டெல்லி வர உள்ளார். இந்த வருகை குறித்து வாஷிங்டன்னில் செய்தியாளர்களிடம் டொனாடு லு பேசினார்.

அப்போது இலங்கைக்கும், பாகிஸ்தானுக்கும் சீனா அதிக அளவு கடன்களை கொடுப்பு அந்நாட்டில் கட்டாய அந்நியச் செலாவணியை ஏற்படுத்த பயன்படுத்தப்படலாம் என்று தெரிவித்த டொனால்டு லு, இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு சீன அதிக அளவு கடன் கொடுப்பது கவலை அளிப்பதாக உள்ளதாகவும் கூறினார். இது குறித்து இந்தியாவுடனும் பிற நாடுகளுடனும் அமெரிக்கா விவாதித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். நாடுகள் தங்கள் முடிவை தாங்களே எடுக்க வேண்டும், மூன்றாவது நாட்டின் கட்டாயத்தின் பேரில் எடுக்கக்கூடாது என்றும் கூறிய டெனால்டு லு இந்த நிலைப்பாட்டை உறுதிப்படுத்த அமெரிக்கா உதவ தயாராக இருப்பதாகவும் கூறினார்.

உளவு பலூன் பறக்கவிடப்பட்ட விவாரத்திற்கு பின்னர் சீனா விவகாரத்தில் அமெரிக்கா அதிக கண்காணிப்புடன் இருப்பதாகவும் அந்நாட்டு வெளியுறவுத்துறை இணை அமைச்சர் டொனால்டு லு குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அரையாண்டு தேர்வு ரத்து: அமைச்சர் செங்கோட்டையன்

Niruban Chakkaaravarthi

டி20 பயிற்சி ஆட்டம்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி

G SaravanaKumar

ஒற்றுமை நடைபயணத்தில் முலாயம் சிங்கிற்கு மௌன அஞ்சலி செலுத்திய ராகுல்

G SaravanaKumar