குலசை தசரா திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தெய்வங்களின் வேடமணிந்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
கர்நாடக மாநிலம், மைசூருக்கு அடுத்தபடியாக, தசரா திருவிழா, தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில், வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் நவராத்திரி தினத்தை முன்னிட்டு நடைபெறும் தசரா திருவிழா, இந்தாண்டு கடந்த 15-ம் தேதி தொடங்கியது. 12 நாள் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மஹிஷா சூரசம்ஹாரம், வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு, ஏழாம் திருவிழாவின் போது மஹிஷாசுரன் தயாராகினார். அப்போது, மஹிஷாசுரனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மஹிஷாசுரன் திருவீதி உலா வந்தார்.
இந்த நிலையில் விழாவின் எட்டாம் நிகழ்ச்சியாக முத்தாரம்மனுக்கு 16 வகையான வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து குலசை திருவிழாவின் ஒரு பகுதியாக உடன்குடி பகுதி பக்தர்கள் சிவன், அம்பாள், கிருஷ்ணர் உள்ளிட்ட தெய்வங்களின் வேடமணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை பெற்று நேர்த்திக் கடன் செலுத்தினர்.







