குலசேகரபட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா வருகிற 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் நிலையில், நியூஸ் 7 தமிழ் மற்றும் நியூஸ் 7 தமிழ் பக்தி யூடியூப் சேனலில் இவை சிறப்பு நேரலை செய்யப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. உலகப் புகழ் பெற்ற இந்த திருவிழாவில், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். மேலும் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தசரா திருவிழாவிற்கு வந்து செல்கின்றனர்.
இந்த கோயிலில் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் இடம் பெற்று பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். இந்தாண்டு திருவிழா வருகிற 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் உச்சநிகழ்ச்சியான சூரசம்ஹாரம், அக்டோபர் மாதம் 5-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு கோயில் கடற்கரை வளாகத்தில் நடைபெற உள்ளது. கொடியேற்றத்திற்கு பின் அம்மனுக்கு காப்பு கட்டி, மாலை அணிந்து பக்தர்கள் விரதம் இருக்க தொடங்குவார்கள்.
பின்னர், காளி, குறவன், குறத்தி, பிச்சைகாரர், போலீசார், முனிவர், முருகர், பாதிரியார், குரங்கு, கரடி மற்றும் ஆண்கள் பெண் வேடம் அணிவது என தங்கள் நேர்த்தி கடனுக்கு ஏற்ப வேடம் அணிந்து செல்வார்கள். மேலும் வேடமணிந்து செல்லும் பக்தர்கள் வீடு வீடாக சென்று காணிக்கை பிரித்து அதனை எடுத்து சென்று கோயில் உண்டியலில் செலுத்துவார்கள்.
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலுக்கு வேடமணிந்து நேர்த்திக்கடனை செலுத்துபவர்களை வெளிநாட்டவர்கள் ஏராளமானோர் வந்து புகைப்படம் எடுத்து செல்வார்கள். இந்நிலையில், குலசை தசரா திருவிழாவை கோயிலுக்கு சென்று காணமுடியாத பக்தர்கள் வீட்டில் நேரடியாக பார்த்து மகிழும் பொருட்டு நியூஸ் 7 தமிழ் இதனை நேரடி ஒளிப்பரப்பு செய்கிறது. 26-ம் தேதி தொடங்கும் கொடியேற்றம் நிகழ்ச்சியில் இருந்து அக்டோபர் 5-ம் தேதி சூரசம்ஹாரம் வரை நிகழும் நிகழ்ச்சிகளை நியூஸ் 7 தமிழ், நியூஸ் 7 தமிழ் பக்தி யூடியூப் சேனல் மற்றும் ஷேர்-சாட் (Sharechat) சேனலில் சிறப்பு நேரலை செய்யப்படுகிறது. 26-ம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கும் சிறப்பு நேரலையை பக்தர்கள் வீட்டில் இருந்து பார்த்து குலசை முத்தாரம்மனை வழிபடலாம்..
-இரா.நம்பிராஜன்










