மதுரை வைகையாற்றில் உள்ள தேனூர் மண்டபத்தில், கொட்டகை
முகூர்த்த கால் நடும் விழா சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது.
மதுரை அழகர்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை பெருந்திருவிழா
உலகப் பிரசித்தி பெற்றதாகும். சித்திரை பெருந்திருவிழாவின் முன்னோட்ட
நிகழ்ச்சியாக, தல்லாகுளம் பிரசன்ன வெங் கடாசலபதி பெருமாள் கோவிலின்
சன்னதி முன்பாக கொட்டகை முகூர்த்த விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து,
வைகையாற்றில் உள்ள தேனூர் மண்டபத்தில் பூஜை செய்யப்பட்டு முகூர்த்த கால்
நடும் நிகழ்வு நடைபெற்றது.
கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு, தேனூர் மண்டபத்தில் நடைபெறும். முகூர்த்த கால்களுக்கு நாணல் புல், மாவிலை, பூ மாலைகள், சந்தனம், தேங்காய், பழங்கள், நூபுர கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம், பட்டர்களின் வேத மந்திரங்கள் மற்றும் மேள தாளம் முழங்க நடந்தது.
பின்னர், தேனூர் மண்டபத்தில் மங்கள இசையுடன், வர்ணம் பூசப்பட்ட முகூர்த்த கால்கள், மாவிலை மற்றும் மாலைகளுடன் இணைக்கப்பட்டு முகூர்த்தக்கால் நடப்பட்டது, இதனை தொடர்ந்து, கள்ளழகர் கோயில் மற்றும் மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகத்தினர், மாற்றி மாற்றி சித்திரை திருவிழா அழைப்பிதழை வழங்கி கொண்டனர்.
—-கு.பாலமுருகன்







