திருப்பூர் மாவட்டம் , பல்லடம் அருகே இயங்கி வரும் இரும்பு உருக்கு
ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி , உண்ணாவிரத போராட்டத்தில்
ஈடுபட முயன்ற 400 பேர் கைது செய்யப்பட்டனர்.
பல்லடம் அருகே அணுப்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் இரும்பு பொருட்களை உருக்கும் இரும்பு ஆலையால், சுற்றுச்சூழல் மாசடைவதாக கூறி கிராம மக்கள் கடந்த 35 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் பல்லடம் வட்டாட்சியர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நடத்திய பேச்சு வார்த்தையில், ஆலை உரிமம் பெறாமல் இயங்கி வருவதாக கிராம மக்கள் கூறினர்.
அவர்கள் அளித்த ஆதாரங்களின் அடிப்படையில், ஆலையை தற்காலிகமாக மூடக்கோரி பல்லடம் வட்டாட்சியர் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த ஆலையில் இருந்து வெளியேறும் புகையால், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாகவும், அப்பகுதி மக்களுக்கு மூச்சுத் திணறல், புற்றுநோய் வருவதாகவும், நீர்நிலைகள் மாசு அடைவதால் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, 35 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தும் ஆலை இயங்குவதாகவும், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு தெரிவித்தனர். இதனால், இன்று பல்லடம் மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்த இருந்தனர்.
இதற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், வடுகபாளையம் சாலையில் இருந்து ஊர்வலமாக சென்று, மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு , உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற பெண்கள் உட்பட 400-கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இவர்களை, தனியார் திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர். மேலும், ஆலையை நிரந்தரமாக மூடும் வரை போராட்டம் தொடரும் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
—-கு.பாலமுருகன்







