கொங்கு நாடு என்று பயன்படுத்தப்பட்டது ஏன்? – எல்.முருகன் விளக்கம்

பதவியேற்பு விழாவின்போது சுயவிவரக் குறிப்பில் கொங்குநாடு என்ற பதம் பயன்படுத்தப்பட்டது Clerical Mistake என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை 7ம் தேதி மத்திய அமைச்சரவை விரிவாக்கப்பட்டு, புதிதாக 43 அமைச்சர்கள்…

பதவியேற்பு விழாவின்போது சுயவிவரக் குறிப்பில் கொங்குநாடு என்ற பதம் பயன்படுத்தப்பட்டது Clerical Mistake என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 7ம் தேதி மத்திய அமைச்சரவை விரிவாக்கப்பட்டு, புதிதாக 43 அமைச்சர்கள் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில் தமிழ்நாட்டிலிருந்து, மாநில பாஜக தலைவராக பொறுப்பு வகித்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றார். இந்த அமைச்சரவையில் புதிதாக இணைந்த அமைச்சர்களின் சுயவிவரக் குறிப்புகள் வெளியிடப்பட்டது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் பிறந்த எல்.முருகனின் சுயவிவரக் குறிப்பில் நாமக்கல் மாவட்டம் என்பதற்கு பதிலாக கொங்கு நாடு – தமிழ்நாடு என்று இடம்பெற்றிருந்தது.

இதனால் கொங்கு நாடு என்ற பதம் தமிழக அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் விவாதப்பொருளாக மாறியது. இதனால் பெரும் சர்ர்சைகளும் வெடித்தன. தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க ஒன்றிய அரசு திட்டமிடுகிறதோ என்ற பார்வையில் திமுக ஆதரவாளர்கள் கண்டனக் குரல் எழுப்பினர். தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் விரும்பினால் கொங்கு நாடு என்ற ஒன்றை உருவக்கலாம் என பாஜக ஆதரவாளர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற நிகழ்வில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, கொங்குநாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கொங்குநாடு குறித்து எந்த விவாதமும் வேண்டாம், அது Clerical mistake என்று பதில் அளித்தார்.

Clerical Mistake என்பதற்கு ஆங்கில அகராதியில், A mistake made in copying or writing out a document என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ஒரு ஆவணத்தை தயார் செய்யும்போது ஏற்படும் எழுத்துப்பிழை அல்லது தட்டச்சு பிழை அல்லது உதவியாளர் செய்த பிழை போன்ற அர்த்தங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. கொங்குநாடு என்ற சொல் தவறுதலாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று எல்.முருகன் தெரிவித்துள்ளதால் கொங்குநாடு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.