தமிழ்நாட்டில் உரிமம் பெற்ற செங்கல் சூளைகள் மட்டுமே செயல்படுகின்றன என்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி யுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்படும் செங்கற் சூளைகள் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி, ஜெயகணேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ்பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது சட்டவிரோதமாக செங்கற்சூளைகள் செயல்படுவதாக கூறும் இடத்தை கனிமவளத் துறை கூடுதல் இயக்குனர் நேரில் சென்று ஆய்வு செய்ததாகவும், அவருடைய அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சமீப காலங்களில் அனுமதி இல்லாமல் செங்கல் சூளைகள் செயல்படுவதாக புகார்கள் அதிகரித்து வருவதாகவும், இதை மாநில அரசு விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
மேலும், உரிமம் பெற்ற செங்கல் சூளைகள் மட்டுமே செயல்படுகின்றன என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், செங்கல் சூளைகளுக்கு உரிமம் வழங்க வேண்டிய வழிமுறை களை நிர்ணயிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இந்த வழக்கில் கனிமவள கூடுதல் இயக்குனர் தாக்கல் செய்யும் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.







