ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே காரப்பள்ளம் வன சோதனைச் சாவடியில், சிதறிக்கிடந்த கரும்புத் துண்டுகளை இரண்டு கொம்பன் யானைகள் ரசித்து ருசித்துத் தின்றன.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, கரடி என ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்த நிலையில் தாளவாடியில் மலைப்பகுதியில் இருந்து சத்தியமங்கலம் பகுதியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று, தமிழ்நாடு கர்நாடகா எல்லையான காரப்பள்ளம் வனசோதனை சாவடி அருகே வந்து கொண்டிருந்தபோது லாரியில் இருந்து கரும்பு கட்டுகள் சரிந்து விழுந்தது.
இதனை ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு கொம்பன் யானைகள் சோதனை சாவடிக்கு வந்து, விழுந்து கிடந்த கரும்பு கட்டுகளில் இருந்த கரும்பு துண்டுகளை ரசித்து ருசித்து தின்றன. இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் வெகு நேரம் காத்திருந்தனர். பிறகு ஒரு வழியாக கரும்பு துண்டுகளை அங்கிருந்து அந்த யானைகள் தூக்கிச் சென்ற பிறகே, அங்கிருந்து வாகனங்கள் வழக்கம் போல் இயங்க ஆரம்பித்தன.
இதேபோல் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைக்கிராமத்திற்குச் செல்லும் சாலையில் சிறுத்தைப் புலி உலவிய சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்தச் சிறுத்தைப் புலி சாலையைக் கடந்துசென்றதும், அங்கேயே உலவிக்கொண்டு இருந்த காட்சியும் அந்த வீடியோவில் பதிவாதியுள்ளது. இதுகுறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனத்துறை ஆய்வுசெய்து வருகிறது.
- பி.ஜேம்ஸ் லிசா









