பல்ப் ஃபிக்ஷன் மற்றும் ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட் போன்ற திரைப்படங்களை எடுத்த உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் ’’குவெண்டின் டேரண்டினோ” தனது இறுதிப் படத்தை விரைவில் தொடக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தி ஹாலிவுட் ரிப்போர்ட்டரின் சமீபத்திய அறிக்கையின்படி, குவெண்டின் டேரண்டினோ ’தி மூவி க்ரிடிக்’ என்ற ஸ்கிரிப்டை எழுதி முடித்துள்ளதாகவும், அதை இந்த ஜூன் மாத இறுதியில் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறுகிறது.
இந்த படத்தைப் பற்றி இன்னும் அதிகம் அறியப்படவில்லை என்றாலும், 1970களின் பிற்பகுதியில் லாஸ் ஏஞ்சல்ஸில் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது என்றும், மேலும் இக்கதை பெண் கதாநாயகியை மையமாகக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
குவெண்டின் டேரண்டினோவின் ‘தி மூவி கிரிட்டிக்’ திரைப்பட விமர்சகர் பாலின் கேலை அடிப்படையாகக் கொண்டதா?
குவெண்டின் டேரண்டினோவின் ’தி மூவி கிரிட்டிக்’ பிரபல திரைப்பட விமர்சகர் பாலின் கேல் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கலாம். 2001 இல் மறைந்த கேல் மிக முக்கியமான திரைப்பட விமர்சகர்களில் ஒருவர். அவர் ஒரு திரைப்பட விமர்சகர் என்பதைத் தவிர, அவர் ஒரு கட்டுரையாளர் மற்றும் நாவலாசிரியராகவும் இருந்தார்.
கேல், அக்காலத்தில் எடிட்டர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களுடன் நிறையச் சண்டையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. 1970களின் பிற்பகுதியில், நடிகர் வாரன் பீட்டியின் வேண்டுகோளின் பேரில் பாரமவுண்ட் நிறுவனத்தின் ஆலோசகராக பணியாற்றினார். அவர் ஆலோசகராக பணிபுரியும் இந்த காலகட்டம் தி மூவி கிரிட்டிக் படத்தின் காலகட்டத்தோடு ஒத்துப்போகிறது. மேலும், பவுலின் கேல் மீது டேரண்டினோ அபரிமிதமான மரியாதை வைத்திருப்பதால், படம் அவரை அடிப்படையாகக் கொண்டிருக்கப் பல சாத்தியக்கூறுகள் உள்ளன.
படத்திற்கு இதுவரை எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும் அறிவில்லப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த வார தொடக்கத்தில் தயாரிப்பு நிறுவனம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குவெண்டின் டேரண்டினோவின் ஆஸ்கார் விருது பெற்ற ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட் படத்தை விநியோகித்த முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சோனி இந்த படத்தைத் தயாரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
குவெண்டின் டேரண்டினோவின் இறுதித் திரைப்படமாக இருக்குமா தி மூவி கிரிட்டிக் ?
தன்னிடம் குறைந்த எண்ணிக்கையிலான கதைகள் இருப்பதாகவும், 60 வயதிற்குள் திரைப்படங்கள் இயக்குவதிலிருந்து ஓய்வு பெற விரும்புவதாகவும் டேரண்டினோ பலமுறை பேட்டிகளில் கூறி வருகிறார். மேலும் அவர் ஓய்வு பெறுவதற்குள் 10 திரைப்படங்களை இயக்க விரும்புவதாகவும் கூறினார். அவர் ஏற்கனவே 9 திரைப்படங்களை இயக்கியுள்ள நிலையில், தி மூவி கிரிட்டிக் அவரது 10வது மற்றும் இறுதிப் படமாக இருக்கலாம். குவென்டின் டரான்டினோ இந்த மாத இறுதியில் தனது அறுவதாவது பிறந்தநாளைக் கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.
2012 இல் பிளேபாய் இதழுக்கு அளித்த நேர்காணலில், ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்குப் பிறகு அவர் ஏன் படங்களை இயக்க விரும்புகிறார் என்பதை விளக்கினார். இயக்குநர்கள் வயதுக்கு ஏற்ப சிறப்பான் படங்களை எடுப்பதில்லை என்றும், அவர்களின் மோசமான திரைப்படங்கள் பொதுவாக அவர்களின் தொழில் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் வரும் படங்களாகவே உள்ளன என்றும் அவர் கூறினார்.
குவெண்டின் டேரண்டினோ தனது திரைப்படங்கள் குறித்த மோசமான விமர்சனத்தை கேட்க விரும்பவில்லை என்று பகிர்ந்து கொண்டார். இருப்பினும், டேரண்டினோ திரைப்படத் தயாரிப்பிலிருந்து ஓய்வு பெறத் திட்டமிட்டிருந்தாலும், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் நாடகங்களை இயக்குவதில் ஈடுபடவுள்ளதாக சில பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார்.








