ஜாமீனில் வந்து பெண்ணின் தந்தையை சுட்டுக் கொன்ற வன்கொடுமை வழக்கு குற்றவாளி!

உத்தர பிரதேசத்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜாமீன் பெற்று வெளியே வந்தவர், பெண்ணின் தந்தையை கொலை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்த…

உத்தர பிரதேசத்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜாமீன் பெற்று வெளியே வந்தவர், பெண்ணின் தந்தையை கொலை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கவுரவ் சர்மா என்பவர், 2018ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு சமீபத்தில் உள்ளூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இந்த நிலையில் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் தந்தையை அவரது கிராமத்தில் நேற்று துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார் கவுரவ் சர்மா. மாலை 4.30 மணியளவில் கிராமத்தில் உள்ள கோயிலின் முன்பு இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பெண்ணின் தந்தை உயிரிழந்துவிட்டதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் கவுரவ் சர்மா குடும்பத்தினருக்கு இடையே தொடர்ந்து மோதல் இருந்துவந்தது. நேற்று கவுரவ் சர்மாவின் மனைவி மற்றும் அத்தை அங்குள்ள கோயிலுக்குச் சாமி தரிசனம் செய்யச் சென்றுள்ளனர். அங்கு பாதிக்கப்பட்ட பெண்ணும் இருந்த நிலையில், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்து பெண்ணின் தந்தையும், சவுரவ் சர்மாவும் வந்துள்ளனர். இருவருக்கும் மோதல் ஏற்பட்ட நிலையில்தான் அவரின் தந்தையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளார் கவுரவ் சர்மா” என்று ஹத்ராஸ் காவல் துறை முதன்மை அதிகாரி வினீத் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக கவுரவ் சர்மா குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் தன்னுடைய தந்தையின் மரணத்திற்கு நீதி கேட்டு காவல் நிலைய வாயிலில் பாதிக்கப்பட்ட பெண் அழுத வீடியோவும் வெளிவந்துள்ளது. “தயவு செய்து எனக்கு நீதி வழங்குங்கள். என்னுடைய தந்தை யாருக்கும் துரோகம் நினைத்ததில்லை. என்னை கொடுமைப்படுத்தியவன்தான் என்னுடைய தந்தையை சுட்டான். என்னுடைய கிராமத்திற்கு 7 பேருடன் அவன் வந்தான். அவன் பெயர் கவுரவ் சர்மா” என்று கதறி அழுதுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.