நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் பொது வெளியில் பெண்களைப் பற்றி தவறாகப் பேச மாட்டார்கள் என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை கழகப் பேச்சாளர் சைதை சாதிக் பாஜகவைச் சேர்ந்த குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம் மற்றும் கவுதமி குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி பாஜக மகளிரணி அளித்த புகாரின் பேரில் சைதை சாதிக் மீது 5 பிரிவுகளின் கீழ் சைபர் குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் பாஜக பெண் நிர்வாகிகள் குறித்து அவதூறாகப் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக் மீது டெல்லியிலுள்ள தேசிய மகளிர் ஆணையத்தில் அதன் தலைவர் ரேகா ஷர்மாவிடம் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு இன்று புகார் அளித்தார்.
https://twitter.com/NCWIndia/status/1588434773382688768
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் பொது மேடைகளில் பெண்களைப் பற்றி தவறாகப் பேச மாட்டார்கள் அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையிலேயே சைதை சாதிக் தவறாகப் பேசினார். அதனை அமைச்சர் கண்டிக்கவில்லை” என்று குற்றம்சாட்டினார். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தேசிய மகளிர் ஆணையம் உறுதி அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.







