கனடாவில் நிறுவப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் சிலையை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிதைதுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக்காலமாகவே கனடா நாட்டில் இடம்பெற்ற தொடர் சம்பவங்களில் இதுவும் ஒன்று.
பஞ்சாப் மாநிலத்தை தனி நாடாக பிரித்து காலிஸ்தான் என்று அறிவிக்க வேண்டும் என்பதை அங்குள்ள பிரிவனைவாதிகள் சிலர் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக ’வாரிஸ் பஞ்சாப் டி’ என்ற அமைப்பை நடத்திவரும் அதன் தலைவரான அம்ரித் பால் சிங்தான் இப்போது பேசு பொருளாகியுள்ளார். இவரை கைது செய்ய பஞ்சாப் காவல்துறை களமிறங்கியுள்ளது.
கடந்த மாதம் அம்ரித்பால் சிங் உதவியாளர் ஒருவரை கடத்தல் வழக்கில் அமிர்தசரஸ் போலீசார் கைது செய்தனர். இந்த சூழலில், பஞ்சாப் அரசு, அம்ரித்பாலுக்கு எதிராக நடத்திய தீவிர சோதனையில் அவர் தலைமையிலான ஒரு அமைப்பைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் அம்ரித்பால் சிங் தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள ஹாமில்டனின் சிட்டி ஹால் அருகே 2012-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மகாத்மா காந்தியின் சிலையை, தற்போது காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
அந்த வீடியோ கட்சியில், இந்திய அரசாங்கத்தால், கனடா நாட்டிற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மகாத்மா காந்தியின் 6 அடி உயர வெண்கல நினைவுச்சின்னம், வண்ணப்பூச்சில் நனைக்கப்பட்டு, அதன் அடிவாரத்தில் காந்தி மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவமதிப்பு உட்பட கிராஃபிட்டிகள் பொறிக்கப்பட்டுள்ளது. சிலையின் வாக்கிங் ஸ்டிக்கில் காலிஸ்தானின் கொடி பறக்கிறது. இன்று அதிகாலையில் நடந்துள்ள இந்த சம்பவத்தை பார்த்த கனடா நாட்டு அதிகாரிகள் உடனடியாக அங்கு எழுதப்பட்டிருந்த கிராபிக்ஸ்வார்த்தைகளை அகற்றி சிலையை சுத்தம் செய்தனர்.
இதுபோன்ற சம்பவங்கள் கனடாவில் பலமுறை அடையாளம் தெரியாத நபர்களாலும், காலிஸ்தான் போன்ற பிரிவினை வாத சக்திகளாலும் அரங்கேறியுள்ளது. அதற்கு உதாரணமாக கடந்த ஜனவரி 30-ம் தேதி பிராம்டனில் உள்ள கவுரி சங்கர் மந்திர் கோவில் சேதப்படுத்தப்பட்டது. அதேபோல், கடந்த ஆண்டு ஜூலை மாதம், கனடாவின் ஒன்டாரியோவில், ரிச்மண்ட் ஹில் நகரில் உள்ள விஷ்ணு கோவிலில் நிறுவப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் 20 ஆடி உயர வெண்கல சிலை சேதப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.










