ரஜினி மக்கள் மன்றத்தின் 8 மாவட்ட முக்கிய நிர்வாகிகள் அவர்களது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தனர்.
ரஜினி மக்கள் மன்றத்தின் 8 மாவட்ட முக்கிய நிர்வாகிகள் அவர்களது ஆதரவாளர்களுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் ரஜினி மக்கள் மன்றத்தின் மூன்று மாவட்ட செயலாளர்கள், மகளிர் அணிச் செயலாளர்கள், வர்த்தக அணி, வழக்கறிஞர் அணி மற்றும் இளைஞர் அணி செயலாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் இணைந்துள்ளனர்.
திமுக சிறுபான்மையினர் பிரிவு மாநில இணைச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தலைமையில் முன்னாள் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் திமுகவில் இணைந்துள்ளனர். இதில் பேட்டியளித்த ரஜினி மக்கள் மன்றத்தின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஏவிகே ராஜா “தாய் கழகத்தில் இணைந்தது போல் பாசம் இப்போது எங்களுக்கு உள்ளது.மேன்மேலும் எங்கள் பணிகளை சிறப்பாக தொடர்வோம்.” என்று தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, “பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் என தேர்தல் வாக்குறுதியை விரைவாக செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர். சட்டமன்றத்தில் அரியணை ஏறியது போல் உள்ளாட்சித் தேர்தலிலும் எங்கள் களப்பணிகளை செய்து திமுகவை வெற்றி அடையச் செய்வோம்.” என காஞ்சிபுரம் மகளிர் அணி மாவட்ட செயலாளராக இருந்த விஜயலட்சுமி தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.








