தேமுதிக பொதுச்செயலாளர் பிரமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டில், பல்வேறு துறைகளுக்குப் பல கோடி ரூபாய் மதிப்பிலான நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 100 நாள் வேலைவாய்ப்பு இல்லை என்பது மிகப்பெரிய ஒரு ஏமாற்றம். நெல் பாதுகாப்பாக கொண்டு செல்ல கிடங்குகள் எதுவும் இல்லை.
பாதுகாப்பு கிடங்குகள் அமைக்க வேண்டும் என நினைத்தோம் அதுவும் அறிவிக்கவில்லை. விவசாயிகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று பயிர் இடுவதற்கு எந்த ஒரு திட்டங்களும் அறிவிக்கவில்லை. கருவேலை மரங்களை அகற்றி அந்த இடத்தினை விவசாயிகளுக்கு குத்தகையாக கொடுக்கலாம். நேற்றும் இன்றும் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் பல ஆண்டுகளாக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களில் பெயர் மட்டும் மாற்றப்பட்டுள்ளது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்கள் வெளிநாடுகளில் வாங்கப்படுவதில்லை. இயற்கை உரத்தை ஊக்கப்படுத்த வேண்டும், ரசாயன பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய கொள்முதல் விலை முறையாக கிடைக்கவில்லை. விவசாயிகளின் நிலை தினந்தோறும் குறைந்து கொண்டே செல்கிறது. பயிர் சேதம் அடையும் பொழுது பயிர் கடன் தள்ளுபடி வாங்குவதில்லை.
ஒவ்வொரு மாவட்டத்தில் விளைவிக்கும் பொருட்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பட்ஜெட்டினால் எந்த ஒரு மாற்றமும் இல்லை. இந்த பட்ஜெட்டை ஒரு செய்தி தாளில் வாசிப்பது போல் வாசித்துள்ளார்கள். விவசாயத்தை மேம்படுத்த புதிய திட்டங்களை அமல்படுத்த வேண்டும். ஏன் இந்திய உணவுகளை ஏற்றுமதி செய்ய முடியவில்லை? பொது இடங்களை விவசாயிகளுக்கு குத்தகைக்கு விட வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. 100 நாள் வேலைவாய்ப்பு உறுதிப்படுத்த வேண்டும். பெண்களுக்கு கொடுக்கக்கூடிய ஊதியம் பற்றாக்குறையாக உள்ளது. அதனால் தான் மகளிர் உரிமை தொகையை பெண்கள் நம்பி உள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்.




