“தமிழகத்தில் கொட்டப்படும் கேரள கழிவுகள்: வேடிக்கை பார்க்கும் தவெக அரசு!” – நயினார் நாகேந்திரன்

கேரளக் கழிவுகளைத் தமிழகத்திற்குள் கடத்திவரும் வாகனங்களை உடனடியாகப் பறிமுதல் செய்ய வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தென்காசி மாவட்டத்தின் விவசாய நிலங்களிலும் திறந்தவெளிகளிலும், அண்டை மாநிலமான கேரளாவிலிருந்து டன் கணக்கில் கொண்டுவரப்படும் அபாயகரமான மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு எரிக்கப்படும் அவலம் தொடர்கதையாகி வருகிறது. ‘கேரள மாநில விற்பனைக்கு மட்டும்’ என்று அச்சிடப்பட்ட பாட்டில்களும் நச்சுக் கழிவுகளும் கண்முன்னே ஆதாரமாகக் கிடந்தும், எல்லையோரச் சோதனைச் சாவடிகளைக் கண்காணிக்கத் திராணியின்றி விஜய்
தலைமையிலான தவெக அரசு கும்பகர்ண தூக்கத்தில் ஆழ்ந்துள்ளது.

இதேபோன்று ஒரு குண்டூசி அளவிலான கழிவுப் பொருளைக்கூடத் தமிழகத்திலிருந்து கொண்டுபோய்க் கேரள எல்லைக்குள் கொட்டிவிட முடியுமா? அங்கு அந்த அளவிற்குச் சோதனைகளும் கண்காணிப்பும் மிகக் கடுமையாக உள்ள சூழலில், அண்டை மாநிலத்தின் நச்சுக் கழிவுகளை இங்கு கொட்டும் அளவிற்குத் தமிழகக் காவல்துறையும், தவெக அரசும் இத்தனை அலட்சியமாக இருக்கிறது! இது தென்காசியில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த எல்லையோர மாவட்டங்களிலும் தொடர்கிறது. பசுமையான நிலங்களை நஞ்சாக்கித் தமிழகத்தைக் கேரளாவின் குப்பைத் தொட்டியாக மாற்றும் இந்த ஆட்சியில், இன்னும் என்னென்ன கூத்துகளும் அவலங்களும் அரங்கேறப் போகின்றனவோ தெரியவில்லை!

எனவே, இனியாவது இந்த மெத்தனப் போக்கைக் கைவிட்டு, கேரள முதல்வரிடம் பேசி இந்த விவகாரத்திற்கு முதல்வர் விஜய் உடனடியாக ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எல்லையோரச் சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி, கேரளக் கழிவுகளைத் தமிழகத்திற்குள் கடத்திவரும் வாகனங்களை உடனடியாகப் பறிமுதல் செய்வதோடு, மக்களின் சுகாதாரத்தோடு விளையாடும் சமூக விரோதிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.