முக்கியச் செய்திகள் இந்தியா கட்டுரைகள் தேர்தல் 2021

சாதனைப்படைத்த சகாவு பினராய் விஜயன்!


எல்.ரேணுகாதேவி

கட்டுரையாளர்

பல மாநிலத்தில் உள்ள மக்கள், இப்படிப்பட்ட ஒரு முதல்வர் நமது மாநிலத்திற்கு கிடைக்கவில்லையே என ஏங்கும் தலைவரா கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் திகழ்கிறார்.

தோழர் (சகாவு) பினராயி விஜயன் என மக்களால் அன்போடு அவர் அழைக்கப்படுகிறார், கேரளாவில் கடந்த 40 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக எந்த கட்சியும் தொடர்ந்து ஆட்சியைத் தக்கவைத்ததில்லை. அந்த வரலாற்றை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி உடைத்துள்ளது. அத்தகைய வரலாற்றைப் படைப்பதற்கு பினராய் விஜயன் முக்கிய காரணமாக விளங்குகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

வரலாற்றுச் சாதனை

கேரள கம்யூனிஸ்ட்டுகளின் அரசியல் வரலாற்றில் ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாட், இ.கே.நாயனார், வி.எஸ் அச்சுதானந்தன் என முக்கிய தலைவர்கள் முதல்வர்களாக இருந்துள்ளனர். ஆனால் பல அரசியல் காரணங்களாலும் நெருக்கடிகளாலும் அவர்களுடைய ஆட்சிக்காலம் ஐந்தாண்டுகளுக்கு மேல் நீடித்தது இல்லை. இதன்காரணமாக கேரளாவில் எப்போது கம்யூனிஸ்ட், காங்கிரஸ் என இரு கட்சிகள் மாறி மாறி ஆட்சியிலிருந்துவந்துள்ளனர். இந்நிலையில் கேரள வரலாற்றில் முதல் முறையாக இடது ஜனநாயக முன்னணி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைப்பது வரலாற்று சாதனையாக பார்க்கப்படுகிறது.

கள்ளிறக்கும் சமூகத்தில் பிறந்த பினராய்

அன்றைய சென்னை மாகாணத்தின் ஆட்சியின் கீழ் இருந்த மலபார் மாவட்டத்தில் ‘பினராய்’ எனும் சிறு கிராமத்தில் பிறந்தவர் விஜயன். இதன்காரணமாக பினராய் விஜயன் என்றிழைக்கப்பட்டார்.

கேரளாவில் மிகவும் ஒடுக்கப்பட்ட சமுதாயமான கள்ளிறக்கும் ஈழவ சமூகத்தில் 1945-ம் ஆண்டு மே 24-ம் தேதி பினராய் விஜயன் பிறந்தார். இவருக்கு உடன் பிறந்தவர்கள் மொத்தம் 14 பேர். அவர்களில் 3 பேர் மட்டுமே உயிர் பிழைத்தார்கள். மற்ற குழந்தைகள் அனைவரும் உடல் ஆரோக்கிய குறைபாடு காரணமாக உயிரிழந்துவிட்டனர்.

குடும்பத்திற்கென இருந்த சிறு நிலமும் கள் விற்பனையில் கிடைக்கும் சொற்ப வருமானத்திலும்தான் பினராய் விஜயன் குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர். ஒரு கட்டத்தில் குடும்ப வறுமை காரணமாகப் பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு அவரை பீடி சுற்றும் வேலைக்கு அனுப்பினார்கள்.

பீடி சுற்றும் வேலை செய்துவந்தாலும் பினராய் விஜயனின் எண்ணம் எல்லாம் படிப்பு மீதுதான் இருந்தது. “திடீரென்று ஒருநாள் என்னைப் பீடி சுற்றும் வேலையிலிருந்து நீக்கினார்கள். வீட்டில் கொண்டுவந்து விட்டுவிட்டு இவனைப் படிக்க அனுப்புங்கனு அம்மாகிட்ட சொல்லிட்டுப் போயிட்டாங்க” என தன்னுடைய குடும்ப பின்னணி குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் பினராய் விஜயன்.

பத்து பைசா கட்டணத்தை எதிர்த்த போராட்டம்

கல்லூரியில் சேர காலதாமதமாகச் சென்ற காரணத்தால் ஓராண்டு கைத்தறி நெசவாளராகவும் பணியாற்றினார். பின்னர் தலசேரியில் உள்ள பிரன்னன் கல்லூரியில் பி.ஏ பொருளாதாரப் படிப்பில் பட்டம் பெற்றார்.

கல்லூரி காலத்தில்தான் பினராய் விஜயனுக்கு அரசியல் மீதான் ஆர்வம் அதிகரித்தது. அவருடைய முதல் போராட்டமே மாணவர்களுக்கான படகு சவாரிக்கு கட்டணம் உயர்த்தியதை எதிர்த்துத்தான். உயர்த்தப்பட்ட படகு கட்டணம் பத்து பைசாதான். ஆனால், அக்காலத்தில் இந்த தொகை பெரிதாகும். படகில் இருந்து கீழே இறங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டார் பினராய் விஜயன். இந்த போராட்டத்தில் அவர் வெற்றியும் பெற்றார். மாணவர்களிடம் படகு கட்டணம் வசூலிக்கக்கூடாது என அரசு பின்னர் உத்தரவிட்டது.

கேரள மாணவர் கூட்டமைப்பில் உறுப்பினராக இருந்த அவர் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியின் பிளவுக்குப் பின்னர் இந்திய மாணவர் சங்கத்தின் உறுப்பினரானார். இந்திய மாணவர் சங்கத்தில் மாநில தலைவராக செயல்பட்டுவந்த பினராய் விஜயன் பின்னர் தன்னை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இணைத்துக்கொண்டார்.

சிறையில் சித்திரவதை

இந்நிலையில் 1975-ம் ஆண்டு அவசரநிலைக் காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். ஒண்றரை வருட சிறை காவலில் பினராய் விஜயன் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். சிறையில் இருந்து விடுதலையான பினராய் விஜயனுக்கு பாலன் மாஸ்டர் என்கிற சகதோழர் தன்னுடைய மகள் கமலாவை திருமணம் செய்துவைத்தார். ஈ.கே. நாயனார் தலைமையில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.

கேரள கூட்டுறவு வங்கித் தலைவராக பணியாற்றிய அவர், 1970ம் ஆண்டு முதல் முறையாக சட்டமன்றத்துக்குள் காலடி எடுத்துவைத்தார். 1977, 1991 மற்றும் 1996 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று மக்கள் பணியாற்றிய பினராயி விஜயன், 1996 முதல் 1998 வரை மின்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக 1998 முதல் 2015-ம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார்.

மக்களின் முதல்வர்

2002-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு‍ உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பினராயி விஜயன், 2016ம் ஆண்டு கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சியைக் கைப்பற்றியபோது முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முதலமைச்சர் பதவியேற்ற அடுத்த ஆண்டு கேரள வெள்ளம், நிபா வைரஸ் தாக்குதல் என பல இயற்கை பேரிடர்களை பினராய் விஜயன் சந்திக்க நேரிட்டது. இக்காலகட்டத்தில் அரசின் செயல்பாடுகளும் பினராய் விஜயனின் மேலாண்மையும் மக்கள் மனத்தில் பெரும் கவனம் பெற்றது.

பெண்கள் மீதான பழமைவாத போக்கை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்க பினராய் விஜயன் அரசு உத்தரவு வழங்கியது பெரும் நெருக்கடியை அவர்களுக்கு ஏற்படுத்தியது. ஆனால் நடந்து முடிந்த தேர்தலில் சபரிமலை அமைந்துள்ள பத்தனதிட்டா மாவட்டத்தில் 5 தொகுதிகளை இடது ஜனநாயக முன்னணி வென்றுள்ளது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும்.

இந்நிலையில் 2019-ம் ஆண்டு கொரோனா வைரஸ் முதலில் கண்டறியப்பட்டது கேரளாவில்தான். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கேரளா மாநிலம் கொரோனா நோய் பரவல் நடவடிக்கையில் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருந்து வருகிறது. ஆக்ஸிஜன் தட்டுப்பாடு பல மாநிலங்களில் பூதாகரமாக எழுந்த போதும் பினராய் விஜயன் தலைமையிலான கேரள அரசு தேவைக்கு அதிகமாக ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து மற்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்துவருகிறது.

கேரள அரசின் செயல்பாடுகள் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்ததுடன் பெரிதும் பாராட்டப்பட்டது. அதேபோல் சமூகத்தில் பின் தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு வீடுகள் கட்டி கொடுத்தது, கொரோனா காலத்தில் வீடுதோறும் ஊட்டச்சத்து உணவுகளை வழங்கியது குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும்.

இந்நிலையில் கேரளா சட்டப்பேரவை தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி 140 தொகுதிகளில் 99 தொகுதிகளைக் கைப்பற்றி பெரும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியில் உள்ள அதே கட்சி மீண்டும் ஆட்சியை தொடரும் நிகழ்வை பினராய் விஜயன் சாதித்துள்ளார்.

இதையடுத்து பினராய் விஜயன் இரண்டாவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்பார் என கூறப்படுகிறது. ஆனால் முதல்வர் யார்? என்பது குறித்து கட்சிதான் முடிவு செய்யும் என கூறியுள்ளார் பினராய் விஜயன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பெட்ரோல் தட்டுப்பாடு – கொழும்பில் பொதுமக்கள் போராட்டம்

Web Editor

ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

Arivazhagan Chinnasamy

செல்போன் வாங்கி தர மறுப்பு; மாணவனின் விபரீத முடிவு

EZHILARASAN D