கேரளா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த முதல் திருநங்கை, தற்போது போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
கேரள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முதல் முறையாக திருநங்கை அனன்யா குமாரி அலெக்ஸ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். 28 வயதான இவர், மலப்புரம் மாவட்டம் வெங்கரா தொகுதியில் ஜனநாயக சமூக நீதிக் கட்சியின் சார்பில் போட்டியிட இருந்தார். இந்தத் தொகுதியில் ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் முஸ்லீம் லீக் கட்சியின் மூத்த தலைவர் குன்காலி குட்டியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜிஜியும் போட்டியிடுகிறார்கள்.
இந்த நிலையில் வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் கடந்துவிட்ட போதிலும், தேர்தல் போட்டியிலிருந்து விலகி தன்னுடைய பரப்புரையையும் முடித்துக்கொண்டுள்ளார் அனன்யா குமாரி அலெக்ஸ். ஜனநாயக சமூக நீதிக் கட்சித் தலைவர்கள் தனக்கு மனதளவில் கொடுத்த அழுத்தமும், கொலை மிரட்டல் காரணமாகவும்தான் தான் போட்டியிலிருந்து விலகியுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
திருநங்கைகளுக்கான பிரதிநிதித்துவமும், சம அந்தஸ்தும் உறுதிசெய்யப்பட வேண்டும் என்பதற்காகவே தான் தேர்தலில் போட்டியிட்டதாகக் கூறிய அனன்யா, ”குன்காலி குட்டிக்காக ஜனநாயக சமூக நீதிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்னை தரக்குறைவாக மிரட்டினர். அத்துடன், மார்க்சிஸ்ட் அரசாங்கம் எனக்கு நெருக்கடியை அளித்தது” என்றும் அவர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
தன்னை ஜனநாயக சமூக நீதிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்திக்கொண்டதாக குறிப்பிட்ட அவர், “என்னை முன்னிறுத்தி அவர்கள் சில திட்டங்களையும் வைத்திருந்தனர். அது எனக்கு முதலில் புரியவில்லை. எனக்கென சில எண்ணங்கள் இருந்தன, நான் அவர்களிடம் சரணடையத் தயாராக இல்லை” என்றும் அவர் கூறியுள்ளார். தன்னை அக்கட்சியின் தலைவர்கள் அவமானப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.







